ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி பெங்களூரில் சின்னசாமி மைதானத்தில் மாலை 7:00 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக தவானும், மயான்க் மார்கன்டேவிற்கு பதிலாக விஜய் சங்கரும், உமேஷ் யாதவிற்கு பதிலாக சித்தார்த் கவுலும் களமிறக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றமும் இன்றி களமிறங்கினர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். முதல் ஓவரை ஜேஸன் பெஹாரன்ஆஃப் வீசினார். முதல் 3 ஓவர்கள் பொறுமையாக விளையாடிய கே.எல்.ராகுல் அடுத்த ஓவரிலிருந்து தனது ருத்ரதாண்டவத்துடன் ஆட ஆரம்பித்தார். பவர்பிளே(1-6 ஓவர்கள்) ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்களை எடுத்திருந்தது. அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த கே.எல்.ராகுல் 7.1வது ஓவரில் குல்டர்-நைல் வீசிய பந்தில் ஜெ ரிச்சர்ட்சனிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 26 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் விளாசினார்.
மிகவும் பொறுமையாக விளையாடி வந்த ஷிகார் தவான் 9.1வது ஓவரில் ஜேஸன் பெஹாரன்ஆஃப் வீசிய பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 24 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 14 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் நிலைத்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் 10.5வது ஓவரில் டார்ஷி ஷார்ட் வீசிய பந்தில் 1 ரன்னில் ஜெ ரிச்சர்ட்சனிடம் கேட்ச் ஆனார். 14.1வது ஓவரில் இந்திய அணிக்கு 100 ரன்கள் வந்தது. 15.3வது ஓவரில் தோனி-கோலி பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது. குல்டர் நைல் வீசிய அந்த ஓவரில் விராட் கோலி ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.
இந்த சிக்ஸர்களின் மூலம் டி20 போட்டிகளில் சின்னசாமி மைதானத்தில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 103 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார். 16.5வது ஓவரில் விராட் கோலி தனது 20வது சர்வதேச அரைசதத்தை அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள்(20 அரைசதங்கள்) விளாசியோர் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார் விராட் கோலி. அத்துடன் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகளை குவித்த வீரர்கள் பட்டியலில் 223 பவுண்டரிகளை விராட் கோலி அடித்து தில்ஷானுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார்.
19.1வது ஓவரில் கோலி-தோனி பார்ட்னர் ஷிப்பில் 100 ரன்கள் வந்தது. அதிரடியாக விளையாடி வந்த தோனி 19.1வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 23 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிகஸர்களுடன் 40 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை அடித்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 38 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் டார்ஸி ஷார்ட், பேட் கமின்ஸ், ஜேஸன் பெஹாரன்ஆஃப், குல்டர் நைல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
191 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் டார்ஸி ஷார்ட் களமிறங்கினர். விஜய் சங்கர் முதல் ஓவரை வீசினார். 2.2வது ஓவரில் சித்தார்த் கவுல் வீசிய பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 7 ரன்களில் போல்ட் ஆனார். 3.6வது ஓவரில் விஜய் சங்கர் வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச் 7 ரன்களில் தவானிடம் கேட்ச் ஆனார். ஆஸ்திரேலிய அணி பவர்பிளே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்களை எடுத்திருந்தது. 8.5வது ஓவரில் டார்ஷி ஷார்ட் மற்றும் மேக்ஸ்வெல் பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது.
11.1வது ஓவரில் விஜய் சங்கர் வீசிய பந்தில் டார்ஸி ஷார்ட், கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்தார். 12.5வது ஓவரில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் தனது 7வது சர்வதேச அரைசதத்தினை விளாசினார். கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 60 ரன்கள் தேவைப்பட்டது.
மேக்ஸ்வெல் 90 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலிய அணி சார்பாக ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 18.1வது ஓவரில் மேக்ஸ்வெல் தனது 2வது சர்வதேச டி20 சதத்தினை விளாசினார். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் மேக்ஸ்வெல். 19.4வது ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் 190 என்ற இலக்கை அடைந்து 2-0 என டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. மேக்ஸ்வெல் 113 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளையும், சித்தார்த் கவுல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 2005ற்குப் பிறகு இந்தியாவில் இந்திய அணி டி20 தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதினையும், தொடர் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார்.