ஆஸ்திரேலிய அணி 4வது ஒருநாள் போட்டியில் பெற்ற வரலாற்று வெற்றியுடன் 5வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. முக்கியமாக மொகாலியில் நடந்த ஒருநாள் போட்டியில் ஒரு பெரிய ரன் இலக்கை எட்டி ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்தப்பின் தொடரை தீர்மானிக்கும் 5வது ஒருநாள் போட்டியில் மிகவும் வலிமையான அணியாக களமிறங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
உஸ்மான் கவாஜா வழக்கம்போல தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இவர் விளையாடிய கடைசி 3 ஒருநாள் 2 சதங்களை விளாசியுள்ளார். மற்றொரு சிறப்பான ஆட்டக்காரர் பீட்டர் ஹான்ட்ஸ்கோம் இந்த தொடரில் மற்றொரு அரை சதத்தை அடித்தார். இவர்கள் இருவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. இந்திய பௌலர்களின் சற்று அற்புதமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை அடித்தது.
சற்று இக்கட்டான சேஸிங்கில் இந்திய அணிக்கு ஒரு அற்புதமான தொடக்கம் தேவைப்பட்டது. ஷிகார் தவான் மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளை தொடக்கத்திலே இந்திய அணி இழந்தது. ரோகித் சர்மா சற்று நிலைத்து விளையாடி அரைசதம் விளாசினார். ஆனால் மிடில் ஆர்டர் வீரர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. புவனேஸ்வர் குமார் மற்றும் கேதார் ஜாதவ் சற்று நிலைத்து விளையாடினர். ஆனால் அவர்களது ஆட்டம் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பலனளிக்கவில்லை. இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதன்மூலம் 2015ற்குப் பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.
இதுவே விராட் கோலி கேப்டனாக சொந்த மண்ணில் இழந்த முதல் ஒருநாள் தொடராகும். இந்திய அணி இந்த ஒருநாள் தொடரில் சில மாபெரும் தவறுகளை செய்தது தொடரை இழக்க காரணமாக இருந்தது. அதைப்பற்றி நாம் இங்கு காண்போம்.
#3 இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள்
2019 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு இது கடைசி தொடராகும். அதனால் சில சோதனைக்காக இந்திய அணி பல்வேறு மாற்றங்களுடன் இந்த தொடரில் களமிறங்கியது. இந்த சோதனை மூலம் இந்திய அணியில் உள்ள சில குறைகளை களைந்து சரியான அணியை தேர்வு செய்து உலகக் கோப்பைக்கு இந்திய அணியை அனுப்பும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் இறக்கியது.
கே.எல்.ராகுலை 4வது ஒருநாள் போட்டியில் நம்பர்-3யில் இறக்கப்பட்டார், ஆனால் அவர் அப்போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4வது ஒருநாள் போட்டியில் நீக்கப்பட்டு 5வது ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டார் ரவீந்திர ஜடேஜா. இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி அதிகமாகவே இந்த தொடரில் மிஸ் செய்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகால் ஒரேயொரு போட்டியில் மட்டுமே களமிறக்கப்பட்டார்.
சரியான ஆர்டரில் இருந்த இந்திய அணியை நிறைய மாற்றங்கள் மூலம் முழுவதும் மாற்றியுள்ளது இந்திய தேர்வுக்குழு. இதுவே இந்திய அணிக்கு மிகப்பெரிய எமனாக அமைந்தது.
#2 விஜய் சங்கரின் பேட்டிங் வரிசை
இந்திய அணி விஜய் சங்கரை 2வது ஒருநாள் போட்டியில் சற்று முன்னதாகவே களமிறங்கியது. இவர் அந்த போட்டியில் ரன் அவுட் ஆக்குவதற்கு முன்பு வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிடில் ஆர்டரில் மிகச் சரியான பேட்ஸ்மேன் விஜய் சங்கர். அடுத்த போட்டியிலும் இவர் 4வது வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி கடைநிலையில் இவரை இறக்கியது. இவரை எந்த ஆர்டரில் இறக்க வேண்டும் என்பது பற்றிய யோசனை சுத்தமாக இந்திய அணிக்கு கிடையாது.
இவர் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆனால் இந்திய அணி தமிழ்நாடு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை கடைநிலையில் இறக்குவதா அல்லது மிடில் ஆர்டரில் இறக்குவதா என குழம்பி வெவ்வேறு வரிசையில் இவரை இறக்கியது. இந்திய அணி விஜய் சங்கரை கடந்த 3 ஒருநாள் போட்டிகளில் நம்பர்-4 பேட்டிங் வரிசையில் இறக்கியிருந்தால் மிடில் ஆர்டர் பிரச்சினை அறவே இந்திய அணியை விட்டு நீக்கியிருக்கலாம்.
தற்போது இந்திய அணி ஒரு நல்ல மிடில் ஆர்டர் இல்லாமலேயே உலகக் கோப்பைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு அணியில் டாப் ஆர்டர் சொதப்பினால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அந்த அணி நம்பியிருக்கும். தற்போது மிக மோசமான மிடில் ஆர்டருடன் உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது இந்திய அணி.
#1 கே.எல். ராகுலை சரியாக பயன்படுத்திக் கொள்ளதது
கே.எல்.ராகுல் இந்திய-ஏ அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். டி20 தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஒருநாள் போட்டியில் இவர் ஒரேயொரு போட்டியில் நம்பர்-3வது வரிசையில் களமிறக்கப்பட்டார். இந்திய அணி இவரை ஒரு மாற்று தொடக்க வீரராக உலகக் கோப்பைக்கு களமிறக்க திட்டமிட்டிருந்தது. எனவே இந்த தொடரில் சில போட்டிகளில் தொடக்க வீரராக இவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.
டி20 தொடரில் இந்திய அணி இவரை தொடக்க வீரராக ரோகித் சர்மா மற்றும் தவானுடன் களமிறக்கியது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் கே.எல்.ராகுல். ஆனால் ஒருநாள் போட்டியில் இவரை பற்றி இந்திய அணி எடுத்த முடிவு அனைவரையும் கோபமடையச் செய்தது. இவருக்கு தொடக்க வீரராக சில ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்த ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டும் 3வது வீரராக இவரை களமிறக்கி இவரது ஆட்டத்திறனை அப்படியே மூடி மறைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்திய அணி இந்த மூன்று பெரும் தவறுகளை இந்த ஒருநாள் தொடரில் செய்துள்ளது. அத்துடன் சில சிறு சிறு தவறுகளையும் செய்தே 3-2 என தொடரை இழந்து இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.