ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முழுக்கு போட்டது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோற்றாலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியை தொடரை கைப்பற்றாமல் தடுத்துள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பௌலிங்கை தேர்வு செய்தார். போட்டிக்கு முன்னதாக இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சக இந்திய வீரர்களுக்கு ராணுவ தொப்பியை அளித்தார், அத்துடன் அப்போட்டியில் விளையாடி வரும் வருமானத்தை இந்திய ராணுவத்திற்கு அளிப்பதாகவும் விராட் கோலி டாஸ் போடுகையில் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணி அருமையான தொடக்கத்தை அளித்தது. விக்கெட் ஏதுமின்றி 100 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது. ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தன்னுடைய முதல் சர்வதேச ஓடிஐ சதத்தை விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் 93 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை தோனி மற்றும் ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கால் மேக்ஸ்வெல்லை பெவிலியனிற்கு அனுப்பினர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மீண்டும் சொதப்பி தங்களது விக்கெட்டை சொற்ப ரன்களில் இழந்து வெளியேறினர். ரோகித் சர்மா, ஷிகார் தவான் மற்றும் ராயுடு மூன்று பேரின் மொத்த ரன்கள் இந்த போட்டியில் 30 ஆகும். தோனி மற்றும் கேதார் ஜாதவ் , விராட் கோலியுடன் இனைந்து சிறப்பான பார்ட்னர் ஷிப்பை அளித்தனர். ஆனால் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மறுமுனையில் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41வது சதத்தை அடித்தார். இருப்பினும் சதமடித்து சிறிது நேரங்களிலே விராட் கோலி தனது விக்கெட்டை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சஞ்சய் பங்கர் கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் தோனி பங்கேற்க மாட்டார் என உறுதி செய்தார். அத்துடன் விராட் கோலி நான்காவது ஒருநாள் போட்டியில் சில மாற்றங்கள் இந்திய அணியில் இருக்கும் என ஒரு சிறு குறிப்பை தெறிவித்துள்ளார். நாம் இங்கு நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI பற்றி காண்போம்.
#1 டாப் ஆர்டர்
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலிய ஓடிஐ தொடர் சிறப்பானதாக இல்லை. முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளனர். தவான் விளையாடிய கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடியுள்ளார். எனவே அடுத்த ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க வீரர்களில் மாற்றம் ஏற்படலாம். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய கே.எல்.ராகுல், தவானிற்கு பதிலாக நான்காவது ஒருநாள் போட்டியில் களமிறக்கப்படலாம்.
இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்கு முன்னதாக இரு ஒருநாள் போட்டிகள் மட்டுமே உள்ளதால் இந்த இரு ஒருநாள் போட்டியில்தான் உலகக் கோப்பை அணிக்கு தேர்வாகவுள்ள மாற்று ஆட்டக்காரர்களை சோதனை செய்ய முடியும். ரோகித் சர்மா அடுத்த போட்டியில் வழக்கம் போல தொடக்க வீரராக களமிறங்குவார். இவர் இந்திய உலகக் கோப்பை அணியின் முக்கிய வீரராக திகழ்வதால் 2019 உலகக் கோப்பைக்கு முன் தான் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிபடுத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர். விராட் கோலி நம்பர்-3ல் சிறப்பாக விளையாடி வருவதால் இவரது பேட்டிங் வரிசையில் எவ்வித மாற்றமும் இருக்காது.
#2 மிடில் ஆர்டர்
அம்பாத்தி ராயுடு இந்த ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டரில் மிகவும் தடுமாறி வருகிறார். முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இவரது ரன்கள் 13, 12, மற்றும் 1. எனவே ராயுடுவை 4வது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சங்கரை நம்பர்-4 வரிசையில் களமிறக்கலாம். ஏனெனில் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை இவர் வொளிபடுத்தியுள்ளார். ராஞ்சி ஒருநாள் போட்டியில் சற்று சிறப்பான ரன்களை குவித்தார். இவரை சற்று முன்னதாக களமிறக்கினால் சிறிது நன்றாக நின்று நிதானமாக விளையாடி ஆட்டத்திறனை வெளிபடுத்துவார். எனவே விஜய் சங்கரை இந்திய அணி 4வது இடத்தில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி கடைசி இரு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்புள்ளது. இவர் நம்பர்-5 பேட்டிங் வரிசையில் களமிறக்கப்படுவார். இவர் இந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் 2019 உலகக் கோப்பை அணியில் இடம்பெறம்பெறுவார். கேதார் ஜாதவ் நம்பர்-6 பேட்ஸ்மேனாக களமிறங்குவார். இவருக்கு இந்த ஓடிஐ தொடர் சிறப்பாக அமைந்தது. சில விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் 81 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
#3 ஆல்-ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள்
புவனேஸ்வர் குமார் கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் இடம்பெறாத இவர் நான்காவது ஒருநாள் போட்டியில் இடம் பெறுவார் என தெரிகிறது. பௌலிங் ஆல்-ரவுண்டரான இவர் ஜடேஜாவுடன் இனைந்து நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார். இந்திய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை பௌலிங்கில் அளித்ததால் தோல்வியை தழுவியது. நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள புவனேஸ்வர் குமார் மற்றும் மற்ற இரு வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, பும்ரா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் இடம்பெற செய்து விளையாட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவிற்கு ஓய்வளிக்கப்பட்டு யுஜ்வேந்திர சஹாலிற்கு உலகக் கோப்பைக்கு முன் இரு போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 வேகப்பந்து வீச்சாளர்கள், 1 சுழற்பந்து வீச்சாளர்கள், இரு ஆல்-ரவுண்டர்களுடன் 2019 உலகக் கோப்பையில் இந்திய அணி களமிறங்கும் முனைப்பில் உள்ளது. கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் சில மாறுதல்களை இந்திய அணியில் காண வாய்ப்புள்ளது. இதனை இந்திய கேப்டனே தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி மார்ச் 10 அன்று மொகாலி-யில் நடைபெறவுள்ளது.