4வது ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளுமே அதிக ரன்களை அடித்தது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த ஒருநாள் தொடரில் முதல் முதலாக இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
ரோகித் சர்மா 5 ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருநாள் போட்டியில் 15வது முறையாக 100+ பார்ட்னர்ஷிப்பை எட்டியுள்ளனர். தொடர் சொதப்பல்களால் துவண்டு போயிருந்த ஷிகார் தவான் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி தனது பழைய ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்தார்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட் வீழ்ச்சிக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் பவுண்டரி விளாச கூட தடுமாறி வந்தனர். இதனால் அதிகமாக இருந்த ரன்ரேட் படிப்படியாக குறைந்தது. விஜய் சங்கர் மற்றும் ரிஷப் பண்ட்-டின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 350+ ரன்களை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 27வது முறையாக கடந்தது.
கடைசி பந்தில் களமிறங்கிய இந்திய டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஜாஸ்பிரிட் பூம்ரா சிக்ஸர் விளாசினார். இதனை கண்டு இந்திய கேப்டன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கிய போது அந்த அணியின் கேப்டன் மற்றும் ஷான் மார்ஷ் தொடக்கத்திலேயே தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் கடந்த ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய உஸ்மான் கவாஜா மற்றும் பீட்டர் ஹான்ட்ஸ்கோம் சிறப்பாக பார்ட்னர் ஷிப் செய்து விளையாட ஆரம்பித்தனர்.
ஆஸ்திரேலிய அணி மிடில் ஆர்டரில் தங்களது விக்கெட்டுகளை இழந்தாலும், ஆஸ்டன் டர்னர் ஆட்டத்தின் போக்கை மாற்றி 43 பந்துகளில் 84 ரன்களை விளாசினார். ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டியில் தங்களது 5வது மிகப்பெரிய சேஸிங்கை செய்து சாதனை படைத்துள்ளது.
நாம் இங்கு 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி செய்த 3 தவறுகளை பற்றி காண்போம்.
#1 கே.எல்.ராகுலை மூன்றாவது இடத்தில் இறக்கியது
முதல் 3 ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் 4வது ஒருநாள் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தவான் சதம் விளாசினார். ரோகித் சர்மா 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
இந்திய அணி 193 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அந்த சூழ்நிலையில் பார்க்கும் போது இந்திய அணி கண்டிப்பாக 400 ரன்களை கடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். கே.எல்.ராகுலை மிடில் ஆர்டரில் உலகக் கோப்பைக்கு தயார் படுத்தும் விதத்தில் விராட் கோலியின் 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார்.
ஆனால் கார்நாடக பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் மிகவும் தடுமாறி இந்திய அணியின் ரன்-ரேட்டை படிப்படியாக குறைத்தார். வழக்கமாக விராட் கோலி மூன்றாவது இடத்தில் இறங்கியிருந்தால் தொடக்க ஆட்டக்காரர்களின் ரன்-ரேட்டை சரியாக தொடர்ந்திருக்கலாம்.
விராட் கோலி தற்போது உள்ள ஆட்டத்திறனிற்கு எளிதாக 400 ரன்களை இந்திய அணி கடந்திருக்கும். இதுவே இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான சரியான ரன்னாக அமைந்திருக்கக்கூடும்.
#2 பேட்டிங் வரிசையில் பல்வேறு மாற்றங்கள்
இந்திய அணி உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் 4வது ஒருநாள் போட்டியில் பல மாற்றங்களை நிகழ்த்தி பேட்டிங் வரிசையையும் மாற்றி இறக்கியது. விராட் கோலி இறங்க வேண்டிய மூன்றாவது பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுல் களமிறக்கப்பட்டார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் அசத்திய விஜய் சங்கரை மீண்டும் கடைநிலை பேட்டிங் வரிசையில் களமிறக்கப்பட்டார். இவர் களமிறங்கிய போது குறைந்த ஒவர்களே இருந்தது. இந்திய அணி மிடில் ஆர்டரில் ஜொலிக்காமல் இருப்பதற்கு காரணம் சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ள வீரர்களை மிடில் ஆர்டரில் களமிறக்காமல் இருப்பதுதான்.
இந்திய கிரிக்கெட் அணி சிறந்த ஆடும் XI-ஐ 4வது மற்றும் 5வது போட்டியில் அளிக்கும் விதமாக மிடில் ஆர்டரில் அதிக மாற்றங்களை செய்தது. இந்திய பேட்ஸ்மேன் விஜய் சங்கரை 4வது இடத்தில் களமிறக்கப்பட்டு அதிக வாய்ப்புகள் அவருக்கு இந்திய அணி வழங்க வேண்டும். இவர் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளதால் அந்த ஆட்டத்திறனை சரியாக வெளிபடுத்த சற்று முன்னதாக களமிறக்கி சோதனை செய்ய வேண்டும். ஏற்கனவே முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இவரது ஆட்டத்திறன் மிகச் சிறப்பாக இருந்தது. அத்துடன் 4வது ஒருநாள் போட்டியிலும் இறுதியாக சில சிக்ஸர்களை விளாசி இந்திய அணியின் ரன்களை உயர்த்தினார்.
கே.எல்.ராகுலை தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா அல்லது ஷிகார் தவானிற்கு ஓய்வளிக்கப்பட்டு களமிறக்கப்பட வேண்டும்.
#3 ரிஷப் பண்ட்-ஆல் தவற விடப்பட்ட ஸ்டம்பிங்
பீட்டர் ஹான்ட்ஸ்கோம் விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய அணியின் வசம் ஆட்டம் இருந்து. இந்த விக்கெட்டிற்குப் பின் களமிறங்கிய வீரர்கள் 8 ஓவர்களில் 80 ரன்களை குவித்தனர்.
இந்திய விக்கெட் கீப்பர் தோனிக்கு கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆஸ்டன் டர்னர் சாஹலின் பந்தை சிக்ஸர் அடிக்க கிரீஸ்க்கு வெளியே அடிவைத்து பெரிய ஷாட்டை வெளிக்கொணர முயன்றார், பந்து சற்று திரும்பவே பண்டிற்கு சிறந்த ஸ்டம்ப்பிங் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவ்வாய்ப்பை தவறவிட்டார் பண்ட். உடனே பார்வையாளர்கள் "தோனி, தோனி" என்று சப்தமிட ஆரம்பித்தனர். இதனால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகுந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்டன் டர்னர் தனது ருத்ரதாண்டவத்தை ஆட ஆரம்பித்தார். குறிப்பாக இந்திய டெத் ஓவர் பௌலர்களான புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாஸ்பிரிட் பூம்ராவின் ஓவர்களில் பந்தை சிக்ஸர்கள், பவுண்டரிகள் திசையில் பறக்கவிட்டார். அத்துடன் இந்திய ஃபீல்டர்கள் பல கேட்சுகளை தவறவிட்டனர்.
ஆஸ்டன் டர்னர் 43 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி பெரிய ரன்களை சேஸிங் செய்தது இல்லை அத்துடன் மிகவும் மோசமாக சொதப்பி வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் 350 ரன்களை சேஸிங் செய்து தனது பழைய ஆட்டத்திறனை மீட்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.