#3 ரிஷப் பண்ட்-ஆல் தவற விடப்பட்ட ஸ்டம்பிங்
பீட்டர் ஹான்ட்ஸ்கோம் விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய அணியின் வசம் ஆட்டம் இருந்து. இந்த விக்கெட்டிற்குப் பின் களமிறங்கிய வீரர்கள் 8 ஓவர்களில் 80 ரன்களை குவித்தனர்.
இந்திய விக்கெட் கீப்பர் தோனிக்கு கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆஸ்டன் டர்னர் சாஹலின் பந்தை சிக்ஸர் அடிக்க கிரீஸ்க்கு வெளியே அடிவைத்து பெரிய ஷாட்டை வெளிக்கொணர முயன்றார், பந்து சற்று திரும்பவே பண்டிற்கு சிறந்த ஸ்டம்ப்பிங் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவ்வாய்ப்பை தவறவிட்டார் பண்ட். உடனே பார்வையாளர்கள் "தோனி, தோனி" என்று சப்தமிட ஆரம்பித்தனர். இதனால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகுந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆஸ்டன் டர்னர் தனது ருத்ரதாண்டவத்தை ஆட ஆரம்பித்தார். குறிப்பாக இந்திய டெத் ஓவர் பௌலர்களான புவனேஸ்வர் குமார் மற்றும் ஜாஸ்பிரிட் பூம்ராவின் ஓவர்களில் பந்தை சிக்ஸர்கள், பவுண்டரிகள் திசையில் பறக்கவிட்டார். அத்துடன் இந்திய ஃபீல்டர்கள் பல கேட்சுகளை தவறவிட்டனர்.
ஆஸ்டன் டர்னர் 43 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி பெரிய ரன்களை சேஸிங் செய்தது இல்லை அத்துடன் மிகவும் மோசமாக சொதப்பி வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் 350 ரன்களை சேஸிங் செய்து தனது பழைய ஆட்டத்திறனை மீட்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.