இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று(மார்ச் 8) அன்று இந்திய நேரப்படி நண்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இன்றி இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியில் நாதன் குல்டர் நில்-ற்கு பதிலாக ஜெ ரிச்சர்ட்சன் களமிறங்கினார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். 1.5வது ஓவரில் ஆரோன் ஃபின்சிற்கு எல்.பி.டபுள்யு கேட்டு இந்திய அணி தனது ரிவிவ்யூவை இழந்தது. 6.4வது ஓவரில் கவாஜாவின் கேட்சை தவறவிட்டார் ஷிகார் தவான். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் தங்களது இயல்பான ஆட்டத்தை ஆரம்பம் முதலே வெளிபடுத்த ஆரம்பித்தனர். முதல் பவர்பிளே (1-10 ஓவர்கள்) ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் வந்தது.
விஜய் சங்கர் தனது முதல் ஓவரில் மோசமாக வீசினாலும், அதன்பின் வீசிய ஓவர்களை சிறப்பாக வீச ஆரம்பித்தார். பார்ட்னர் ஷிப் பிரேக்கர் என்றழைக்கப்படும் கேதார் ஜாதவ் வீசிய இரண்டு ஓவர்களில் 32 ரன்களை விளாசினர் ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன்கள். 16.3வது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 19வது சர்வதேச அரைசதத்தை விளாசினார். ஜிம்பாப்வேவிற்கு எதிராக டி20யில் 172 ரன்களை விளாசி சாதனை படைத்தப்பிறகு வெள்ளை பந்தில் 50+ ரன்களை இன்றுதான் அடித்துள்ளார் ஆரோன் ஃபின்ச்.
18.6வது ஓவரில் உஸ்மான் கவாஜா-வும் அரைசதத்தை விளாசினார். 31வது ஓவர்கள் வரை ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் விளையாடி வந்தனர். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் கணித்து சிறப்பாக விளையாடினர். 31.5வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 99 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 93 ரன்களை குவித்தார். ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா பார்ட்னர் ஷிப்பில் ஆஸ்திரேலிய அணிக்கு 193 ரன்கள் வந்தது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக இந்திய மண்ணில் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிக பார்ட்னர் ஷிப் செய்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை இருவரும் பிடித்தனர். 2018லிருந்து ஆஸ்திரேலியா விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்கார்கள் விளாசிய அதிக பட்ச ரன்கள் இதுவாகும். அத்துடன் ராஞ்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் அதிகபட்ச பார்ட்னர் ஷிப் இதுவாகும். இதற்கு முன் 2013ல் மேக்ஸ்வெல் மற்றும் ஜார்ஜ் பெய்லி இருவரும் சேர்ந்து 5வது விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு 150 ரன்கள் குவித்ததே ராஞ்சியில் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் அதிகபட்ச பார்ட்னர் ஷிப் ரன்களாக இருந்தது.
ஆரோன் ஃபின்ச் விக்கெட்டிற்குப் பிறகு அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணி 37வது ஓவர் முடிவில் 200 ரன்களை கடந்தது. 36.6வது ஓவரில் உஸ்மான் கவாஜா தனது முதல் சர்வதேச ஓடிஐ சதத்தை விளாசினார். 30+ வயதில் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை விளாசிய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார் உஸ்மான் கவாஜா. 38.3வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் உஸ்மான் கவாஜா, பூம்ராவிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 113 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 104 ரன்களை குவித்துள்ளார். 41.1வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களை கடந்தது.
41.6வது பந்தில் அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் ஜடேஜா மற்றும் தோனியின் மூலம் ரன்-அவுட் ஆனார். இவர் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களை அடித்தார். 43.2வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ஷான் மார்ஷ் 7 ரன்களில் விஜய் சங்கரிடம் கேட்ச் ஆனார். இதே ஓவரின் 4வது பந்தில் பீட்டர் ஹான்ட்ஸ்கோம் ரன் ஏதுமின்றி போல்ட் ஆனார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் நிதானமாக ஆஸ்திரேலிய அணியின் ரன்களை உயர்த்தி வந்தார். 49வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை கடந்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 313 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ராஞ்சி மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இலக்கு இதுவாகும்.
314 என்ற இலக்குடன் இந்திய தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். பேட் கமின்ஸ் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். ஜெ ரிச்சர்ட்சன் தான் வீசிய முதல் ஓவரை மெய்டன் செய்தார். சற்று மிகப்பெரிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கும் போது ஷிகார் தவான் ஜெ ரிச்சர்ட்சன் வீசிய 3.1 வது ஓவரில் 1 ரன்களில் மேக்ஸ்வெல்-டம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவரை தொடர்ந்து 4.3வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் 14 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார். பின்னர் களமிறங்கிய அம்பாத்தி ராயுடுவும் 6.2வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் 2 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். தொடர் மூன்று ஓவவர்களில் 3 விக்கெட்டை இழந்த இந்திய அணியை மீட்டு எடுக்கும் முயற்சியில் விராட் கோலி மற்றும் தோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்திய அணி பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 23 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டனாக குறைந்த போட்டிகளில் 4000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர்களுள் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். இவர் கேப்டனாக 63 சர்வதேச போட்டிகளில் விளையாடி 4000 ரன்களை குவித்துள்ளார்.
18.4வது ஓவரில் தோனி விளாசிய சிக்ஸரின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 217 சிக்ஸர்களுடன் தோனி முதலிடத்தை பிடித்தார். 19.1வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் தோனி அடித்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. இவர் மொத்தமாக 46 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 26 ரன்களை அடித்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 23.1 வது ஓவரில் தனது 50 வது சர்வதேச அரை சதத்தை அடித்தார். பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் விராட் கோலியுடன் சேர்ந்து சிறிது நேரம் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 31.4வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் கேதார் ஜாதவ் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 39 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் ஸ்ட்ரைக்கை விராட் கோலிக்கு மாற்றி கொடுக்க, அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த ஆராம்பித்தார்.
34.1வது ஓவரில் விராட் கோலியின் கேட்சை தவறவிட்டார் மேக்ஸ்வெல். அத்துடன் இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் விஜய் சங்கருக்கு எல்.பி.டபுள்யு கேட்டு ஆஸ்திரேலிய அணி தனது ரிவிவ்யூவை இழந்தது. 34.5வது ஓவரில் விராட் கோலி தனது 41வது சர்வதேச சதத்தை விளாசினார். 225 ஒருநாள் போட்டிக்குப் பிறகு அதிக சதங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 37.3வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 95 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 123 ரன்களை குவித்தார். விராட் கோலி ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் தனது அதிக சராசரியான 60.08ஐ அடைந்தார். கடைசிவர்களில் இந்திய அணி வெற்றி பெற 87 ரன்கள் தேவைப்பட்டபோது ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
42.5வது ஓவரில் இந்திய அணி 250 ரன்களை கடந்தது. 42.6வது ஓவரில் நாதன் லயான் வீசிய பந்தில் விஜய் சங்கர், ஜெ ரிச்சர்ட்சனிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 30 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களை எடுத்தார். 47..1வது ஓவரில் ஜெ ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் ஜடேஜா மேக்ஸ்வெல்-டம் 24 ரன்களில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய முகமது ஷமி தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசி இதே ஓவரில் 8 ரன்களில் பேட் கமின்ஸ்-டம் கேட்ச் ஆனார். 48.2வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் குல்தீப் யாதவ் 10 ரன்களில் ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டின் மூலம் ஆஸ்திரேலிய அணி 32 ரன்களில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கமின்ஸ், ஆடம் ஜாம்பா, ஜெ ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நாதன் லயான் 1 விக்கெட்டை வீழ்த்தினார். உஸ்மான் கவாஜா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
நான்காவது ஒருநாள் போட்டி மார்ச் 10 அன்று மொகாலியில் நடைபெறவுள்ளது.