இந்திய அணியின் வெளிநாட்டு வெற்றி கனவு இந்த தொடரிலாவது நடக்குமா? 

பார்டர் கவாஸ்கர் கோப்பை 
பார்டர் கவாஸ்கர் கோப்பை 

நாளை , இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி செல்கிறது. ஆனால் வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர் வெற்றி என்பது இந்தியாவை பொறுத்தவரை கானல் நீராக தான் இருக்கிறது. குறிப்பாக தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது ஒவ்வொரு இந்திய ரசிகனின் கனவாகவே இருக்கிறது. இந்த முறை அந்த மேஜிக் நடக்குமா? பார்க்கலாம்

இந்த வருடத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களின் போது ரசிகர்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனாலும் இரு தொடர்களிலும் தலா ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்த இந்திய அணி தொடரை இழந்தது. ஆனால் இந்திய அணி விளையாடிய ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் நாம் வெற்றி பெரும் வாய்ப்பு இருந்ததை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனாலும், எதோ ஒரு விதத்தில் அணி போராடி தோற்றது. இந்த முறை ஆஸ்திரேலியா அணி பலவீனமான அணி என்பது கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் என எல்லா தரப்பிலும் ஒப்புகொள்ளும் உண்மை. ஸ்டிவன் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா அணியை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்த இந்தியாவுக்கு கிடைத்த ஒரு அறிய சந்தர்ப்பம் இது. வெற்றி கிடைக்குமா? இந்திய ரசிகனின் கனவு பலிக்குமா? என்பது பற்றிய ஒரு சிறு அலசல்.

விராத் கோஹ்லி

சென்ற முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்த போது விராட் கோஹ்லியின் விஸ்வரூபம் ஆரம்பித்தது அந்த கணத்தில் தான். மிச்சேல் ஜான்சனின் புயல் வேக பவுன்சர் விராட் கோஹ்லியின் ஹெல்மெட்டை தாக்கியது. அது அவர் சந்தித்த முதல் பந்து. அதற்கு பிறகு அந்த தொடரில் நடந்ததெல்லாம் வரலாறு.

மிச்சேல் ஜான்சனின் புயல் வேக பவுன்சர்
மிச்சேல் ஜான்சனின் புயல் வேக பவுன்சர்

சந்தேகமே இல்லாமல் இந்த நொடியில் உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர் ஆனார். ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார் வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒளிபரப்பு சானல், விராட் கோஹ்லியை வைத்தே டெஸ்ட் தொடரை விளம்பரம் செய்து வருகிறது. சென்ற ஆஸ்திரேலியா தொடரில் ஆரம்பித்த அவரது கேப்டன்சி இப்போது ஒரு முழு சுற்றுக்கு வந்திருக்கிறது. ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய அணியும் இவரை தான் குறி வைத்திருக்கின்றன. அவர் அதிக ரன்கள் அடிப்பார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் அவரது கேப்டன்சி முடிவுகள் சில கேள்விக்குள்ளாகி வருவது கவலைக்குரிய விஷயம். அணி தேர்வு, இக்கட்டான நேரங்களில் சில தவறான முடிவுகள் எடுப்பதை பல ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள். இந்த தொடர் கண்டிப்பாக அவரது கேப்டன்சிக்கு அக்கினி பரீட்சை. இதில் அவர் வெல்வதை பொறுத்து தான், இந்திய அணியின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி

பலவீனமான அணி என எல்லா திசைகளில் இருந்து சொல்லப்பட்டாலும், எந்த நிலையிலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒரு அணி. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இந்தியா தான் தொடரை வெல்லும் என கணித்து வரும் வேளையில், சொந்த மண்ணில் அந்த அணி எப்போதும் பலமான அணி தான், இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் ஒரு பலம் குறைந்த எதிரியை எதிர் கொள்ளும் போது தான் நாம் எப்போதையும் விட விழிப்புடன் இருக்க வேண்டும். இன்று ஆஸ்திரேலியா அணியின் நிலையும் அது தான். அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் அவர்கள் மேல் எந்த வித அழுத்தமும் இல்லாத நிலையில் தான் விளையாட போகின்றனர். தொடர் தோல்விகளால் கடும் சரிவை சந்தித்து இந்த தொடரை வென்றால், அவர்கள் அணிக்கு இது மிகப்பெரிய போனஸ் தான்.

ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு எப்போதும் போல் இப்போதும் பலமாக இருக்கிறது. ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசல்வுட், கம்மின்ஸ் என மிரட்டும் வரிசை.

இந்திய பந்து வீச்சாளர்கள் vs பேட்ஸ்மேன்கள்

2011 இங்கிலாந்து டெஸ்ட் தொடரை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். முதல் டெஸ்ட் முதல் நாளில் ஜாகீர்கான் காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறுகிறார். அந்த போட்டியில் தோல்வி அடைகிறது இந்தியா. அடுத்த போட்டிகளில் ஜாகீர்கானுக்கு பதிலாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளரை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு இருந்தது. ஆனால் தகுதியான வேகபந்துவீச்சாளரை தேடும் நிலையில் இருந்தது. கோவாவில் பீச் வாலிபால் விளையாடி கொண்டிருந்த ஆர் பி சிங்கை வேறு வழியில்லாமல் அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம். அங்கு போய் அவரும் வேகமும் இல்லாமால், ஸ்விங்கும் இல்லாமல் பந்து வீசினார். ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. புவனேஷ்வர், பும்ரா, ஷாமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா என இந்திய வேகப்பந்து வீச்சு முன்னெப்போதும் இல்லாத வலுவான நிலையில் இருக்கிறது. கடந்த இரண்டு வெளிநாட்டு தொடர்களில் மொத்தம் நடந்த 8 டெஸ்ட் மேட்ச்களில் இரண்டு இன்னிங்ஸ்களும் சேர்ந்து 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு முறையும் எதிரணியை ஆல் அவுட் செய்துள்ளது. ஒரே ஒரு போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததால் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைக்க வில்லை.

இந்திய வேங்கைகள் 
இந்திய வேங்கைகள்

மேற்கண்ட 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய வெற்றி பெறும் நிலையில் இருந்த போட்டிகள் தான் அதிகம். ஆனால் நமது பேட்ஸ்மேன்கள் இக்கட்டான நிலையில் கைவிட்டதால் நாம் தோற்க வேண்டியதாகி விட்டது. இந்த தொடரும் நமது பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை அட்டகாசமாக செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். பேட்ஸ்மேன்கள் மட்டும் கொஞ்சம் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் கண்டிப்பாக இந்தியாவின் வெற்றி கனவு பலிக்கும்.

எதிரணியின் பந்துவீச்சை திறம்பட சமாளிக்கும் அணி தான் இந்த தொடரில் வெற்றி வகை சூடும்.

Quick Links