கிரிக்கெட் ஆஸ்திரேலியா XI மற்றும் இந்திய அணி மோதும் பயிற்சி ஆட்டம் நேற்று சிட்னியில் தொடங்கியது. நேற்றைய நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடமால் நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளான இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா XI டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரர்களாக பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கினர். கே.எல். ராகுல் தொடக்கத்திலேயே தடுமாறினார். 18 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே அடித்தார். இந்திய அணி 16 ரன்களில் இருந்தபோது "ஜாக்சன் கோல்மேன்" வீசிய பந்தில் மேக்ஸ் பிரயட்-டிடம் கேட்ச் ஆனார் கே.எல் ராகுல். இவர் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் 5வது போட்டியின் முதல் இன்னிங்சை தவிர மீதம் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே பயங்கரமாக சொதப்பினார். அத்துடன் இந்திய மண்ணில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் சொதப்பியுள்ளார்.
ஆனால் கே.எல். ராகுலுடன் மறுமுனையில் களமிறங்கிய பிரித்வி ஷா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா XI அணியின் தொடக்க பௌலர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார். பிரித்வி ஷா அற்புதமாக விளையாடி தனது அரை சதத்தினை விளாசினார். இவர் 66 ரன்களில் இருந்தபோது "ஃபாலின்ஸ்" வீசிய பந்தில் போல்ட் ஆனார். பிரித்வி ஷா மட்டும் மொத்தமாக 11 பவுண்டரிகளை அடித்தார். புஜாரா பிரித்வி ஷாவிற்கு அற்புதமான பார்ட்னர் ஷிப்பை கொடுத்ததால் இருவரும் சேர்ந்து 80 ரன்களை அடித்தனர்.
புஜாரா 6 பவுண்டரிகளுடன் 89 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். அத்துடன் விராட் கோலியுடன் மற்றுமொரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். உணவு இடைவேளைக்கு பிறகு லுக் ராபின்ஸ் வீசிய பந்தில் புஜாரா போல்ட் ஆனார். இதனால் விராட் கோலியுடனான பார்ட்னர் ஷிப் 73 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. பின் கோலி தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். கோலி, ரகானேவுடன் கைகோர்த்து 35 ரன்களை அடித்தார்.
விராட் கோலி சதமடிக்கும் நோக்கில் தனது இன்னிங்ஸை பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். ஆனால் 48வது ஓவரில் ஆரோன் ஹார்டி வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார். விராட் கோலி 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 87 பந்துகளில் 64 ரன்களை விளாசினார்.
பின்னர் களமிறங்கிய ஹனுமா விஹாரி , ரகானேவுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர்களுடைய பார்ட்னர் ஷிப் சிறிது நேரம் இந்திய அணிக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. தேநீர் இடைவேளைக்கு பிறகு டார்சி ஷார்ட் வீசிய பந்தில் எல்.பி.டபல்யு(LBW) ஆனார் ஹனுமா விஹாரி . இவர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரிகளுடன் 88 பந்தில் 53 ரன்களை விளாசினார்.
ரகானே பொறுமையாக விளையாடி தனது 115 வது பந்தில் அரை சதத்தை எட்டினர். இவர் மொத்தமாக 1 பவுண்டரியுடன் 123 பந்தில் 53 ரன்களை விளாசி ரிட்டர்ன் ஹார்ட் ஆனார்.
ரோகித் சர்மா இப்போட்டியில் அதிரடியாக விளையாடினார். இவர் 55 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 40 ரன்களை விளாசினார். ரோஹித் சர்மா "சமர்" வீசிய 84 வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். இவர் 40 ரன்களில் இருந்தபோது "ஆரோன் ஹார்டி" வீசிய பந்தில் டார்சி ஷார்ட்-டிடம் கேட்ச் ஆனார். இதனால் தனது அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அஸ்வின், ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய முவரும் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். ரிஷப் ஃபன்ட் 11 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை 92 ஓவர்கள் எதிர்கொண்டு அடித்ததுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா XI அணியின் சார்பாக ஆரோன் ஹார்டி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பௌலர்கள் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
பின்னர் களமிறங்கிய கிரிக்கெட் ஆஸ்திரெலியா XI அணி 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்களை அடித்த போது 2 ஆம் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது. டார்சி ஷார்ட் 2 பவுண்டரிகள் அடித்து 10 ரன்களுடனும், மேக்ஸ் பிரயட் 2 பவுண்டரிகள் அடித்து 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.