தற்போது நமது இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 போட்டிகள், மற்றும் 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி வென்று விட்டது. அடுத்து ஒரு நாள் போட்டி தொடர் தொடங்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, இந்திய அணி வெளுத்து வாங்கிய ஒருநாள் போட்டிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ( 2011 ஆம் ஆண்டு )
2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி, நமது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கௌதம் கம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்த கௌதம் கம்பீர், 67 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு சேவாக் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். சுரேஷ் ரெய்னா 44 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். இறுதிவரை பவுண்டரி மழை பொழிந்த வீரேந்தர் சேவாக், 149 பந்துகளில் 219 ரன்கள் விளாசினார். இதில் 25 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்தது.
419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சிம்மன்ஸ், 36 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ராம்தின், 96 ரன்கள் விளாசினார். இவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 49 ஓவர்களின் முடிவில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது. எனவே இந்திய அணி, இந்த போட்டியில் 153 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#2) இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ( 2018 ஆம் ஆண்டு )
கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி, நமது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த ஒருநாள் தொடரின் நான்காவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா, 137 பந்துகளில் 162 ரன்கள் விளாசினார். இதில் 20 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அதன் பின்பு மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய அம்பத்தி ராயுடு, 51 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது.
378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. பவல் மற்றும் ஹேம்ராஜ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த சாய் ஹோப், டக் அவுட்டாகி வெளியேறினார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர், 54 ரன்கள் விளாசினார். இவரைத் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும், விரைவிலேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 153 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.