சர்வதேச டி20 போட்டிகளில் அதிரடிக்கு பெயர் போன ஒரு அணி என்றால், அது வெஸ்ட் இண்டீஸ் அணி தான். வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிக்சர் அடிப்பதில் வல்லவர்கள். தற்போது இந்த வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன், நமது இந்திய அணி டி - 20 போட்டியில் மோத உள்ளது. நமது இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி – 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. இவ்வாறு இரண்டு அணிகளுக்கு இடையே நடந்த, விறுவிறுப்பான போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ( 2018 ஆம் ஆண்டு )
கடந்த 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி, நமது இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி– 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹெட்மேயர் மற்றும் சாய் ஹோப் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன் பின்பு வந்து சிறப்பாக விளையாடிய பிராவோ, 43 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கிய நிக்லஸ் பூரான், 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 181 ரன்கள் குவித்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்பு களம் இறங்கிய ராகுல், சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், 38 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இறுதிவரை இந்திய அணியின் வெற்றிக்கு போராடிய ஷிகர் தவான், போட்டி இக்கட்டான சூழ்நிலையில் 92 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி வெற்றி பெற இரண்டு பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான், தவான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் ஒரு பந்துக்கு 1 ரன் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்ய வந்த மணிஷ் பாண்டே, பந்தை நேராக பேபியன் ஆலனை நோக்கி அடித்தார். ஆனால் அவர் அந்தப் பந்தை சரியாக பிடிக்காத காரணத்தினால் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
#2) இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ( 2016 ஆம் ஆண்டு )
2016 ஆம் ஆண்டு நமது இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. எவின் லீவிஸ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்களை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய சார்லஸ் 79 ரன்கள் விளாசினார். அதிரடியாக 9 சிக்சர்களை விளாசிய லீவிஸ், 49 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 245 ரன்கள் குவித்தது.
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா, 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். அதன் பின்பு வந்த ரகானே மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் இந்திய அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த தோனி, தனது விக்கெட்டை பறிகொடுத்தார். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இறுதிவரை தனி ஒருவராக போராடிய ராகுல், 110 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.