ஜாஸ்பிரிட் பூம்ரா இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் ஒரு முக்கிய வீரராக உள்ளார். இந்த வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்காக பெரும் பங்களிப்பை அளித்து வருகிறார். தற்போது ஐசிசி 2019 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். 7 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓவருக்கு 4 ரன்களை மட்டுமே அளித்து அற்புதமான எகானமி ரேட்டை தன்வசம் வைத்துள்ளார்.
ஜாஸ்பிரிட் பூம்ரா ஓய்வின்றி தொடர்ந்து தன்னுடைய தேசிய அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணி சற்று வலிமை குறைந்த மேற்கிந்தியத் தீவுகளை நேருக்கு நேர் சந்திக்க உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகள், சில ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளது. இத்தொடரில் பூம்ராவிற்கு ஓய்வளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதனால் தற்போது இவருக்கு சற்று சமமான எந்த பௌலர் அணியில் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இந்திய தேர்வுக்குழுவிற்கு சில வீரர்களை பூம்ராவிற்கு மாற்றாக கணித்து வைத்துள்ளனர். நாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பூம்ராவிற்கு மாற்றாக அணியில் இடம்பெற வாய்ப்புள்ள 3 வீரர்களைப் பற்றி காண்போம்.
#3 நவ்தீப் சைனி
உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் டெல்லி அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சீரான பெரும் பங்களிப்பை அளித்துள்ளார் நவ்தீப் சைனி. இருப்பினும் இவரது பௌலிங்கை நிருபிக்கும் வாய்ப்பு இவ்வருட ஐபிஎல் தொடரில் தான் நவ்தீப் சைனிக்கு கிடைத்துள்ளது. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் 13 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் இவரது எகானமி ரேட் மிகவும் கவரும் வகையில் அமைந்து, ஓவர்களுக்கு 8 ரன்கள் விதம் அமைந்துள்ளது. பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் 10 ரன்களை ஒரு ஓவர்களுக்கு அளித்து வருவார்கள். இதுவே அதிகபடியான மோசமான ரன்களாகும். இவர் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் விளையாடிய காரணத்தால் இவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கப்பெறும் என்பது வெளிபடையான கருத்தாகும்.
இவர் தொடர்ந்து 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் திறன் படைத்துள்ளார். இதன்மூலம் நிறைய கிரிக்கெட் வள்ளுநர்களின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. லெஜன்ட்ரி கிரிக்கெட்டர் சவ்ரவ் கங்குலி, நவ்தீப் சைனியை உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்ய பரிந்துரை செய்தார். ஆனால் இவரது விருப்பம் நிறைவேற்றப்படவில்லை. உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் நவ்தீப் சைனி இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளது.
#2 தீபக் சகார்
நவ்தீப் சைனிக்கு முன்னரே, தீபக் சகார் இந்திய அணியில் அறிமுகமாகி விட்டார். இருப்பினும் இவருக்கு அளிக்கப்பட்ட இரு வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டார்.
ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடிய இவர் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி எகானமி ரேட்டை ஓவருக்கு 9ஆக வைத்திருந்தார். சர்வதேச டி20யில் தீபக் சாகார் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் ஆனால் எகானமி ரேட் மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் தற்போது வரை அவருக்கு வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.
ஆனால் 2019 ஐபிஎல் தொடரில் தன்னை மீண்டும் நிருபித்துள்ளார் தீபக் சகார். 17 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார். இவரது எகானமி ரேட் ஓவருக்கு 7ஆக இருந்தது. இது ஒரு அதிக ரன்கள் குவிக்கும் டி20 தொடரில் மிகவும் சிறப்பான எகானமி ரேட்டாகும். தீபக் சகாரின் பந்துவீச்சு மிகவும் வேகமாக இருக்காது ஆனால் மிகவும் நுணுக்கமான பௌலிங்கை மேற்கொள்வதில் வல்லவர். அத்துடன் அவரது தற்போது ஆட்டத்திறனை கருத்தில் கொண்டு இந்திய தேர்வுக்குழு மீண்டும் வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1 கலீல் அகமது
இந்திய தேர்வுக்குழுவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேடலிற்கு கலீல் அகமது நிச்சயமாக ஒரு முற்றுப்புள்ளியாக இருப்பார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரிலும், இந்திய தேசிய அணியிலும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தி அசத்தியுள்ளார். 17 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் கலீல் அகமதுவின் எகானமி ரேட் சற்று மோசமாக அமைந்து அவரது சாதனைக்கு இடையுறாக அமைந்துள்ளது.
இருப்பினும் 21வயதான கலீல் அகமது 2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பங்கேற்று அதிரடி பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். 9 போட்டிகளில் பங்கேற்று 19 விக்கெட்டுகளை கலீல் அகமது வீழ்த்தியுள்ளார். மேலும், இவரது எகானமி ரேட் ஒரு ஓவருக்கு 8ஆக உள்ளது. 2018ல் இவரது எகானமி ரேட் ஓவருக்கு 12 ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சிறப்பான முன்னேற்றத்தை அவரிடமிருந்து எடுத்துரைக்கிறது. கேப்டனின் தேவைக்கேற்ப சிறு கால இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார் கலீல் அகமது. 2019 ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. முகமது ஷமி ஒருநாள் போட்டிகளில் தான் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிகொணர்ந்ததால் கலீல் அகமதுவிற்கு உலகக்கோப்பை அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் கலீல் அகமது கடைசியாக 5 மாதங்களுக்கு முன்னதாக விளையாடினார். தேர்வுக்குழு இடது கை வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய நினைத்தால் முதல் வாய்ப்பு இவருக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.