#1 கலீல் அகமது
இந்திய தேர்வுக்குழுவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேடலிற்கு கலீல் அகமது நிச்சயமாக ஒரு முற்றுப்புள்ளியாக இருப்பார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரிலும், இந்திய தேசிய அணியிலும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தி அசத்தியுள்ளார். 17 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் கலீல் அகமதுவின் எகானமி ரேட் சற்று மோசமாக அமைந்து அவரது சாதனைக்கு இடையுறாக அமைந்துள்ளது.
இருப்பினும் 21வயதான கலீல் அகமது 2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பங்கேற்று அதிரடி பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். 9 போட்டிகளில் பங்கேற்று 19 விக்கெட்டுகளை கலீல் அகமது வீழ்த்தியுள்ளார். மேலும், இவரது எகானமி ரேட் ஒரு ஓவருக்கு 8ஆக உள்ளது. 2018ல் இவரது எகானமி ரேட் ஓவருக்கு 12 ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சிறப்பான முன்னேற்றத்தை அவரிடமிருந்து எடுத்துரைக்கிறது. கேப்டனின் தேவைக்கேற்ப சிறு கால இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார் கலீல் அகமது. 2019 ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. முகமது ஷமி ஒருநாள் போட்டிகளில் தான் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிகொணர்ந்ததால் கலீல் அகமதுவிற்கு உலகக்கோப்பை அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் கலீல் அகமது கடைசியாக 5 மாதங்களுக்கு முன்னதாக விளையாடினார். தேர்வுக்குழு இடது கை வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய நினைத்தால் முதல் வாய்ப்பு இவருக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.