கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிஎதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தொடக்கத்திலிருந்தே எலியும், பூனையுமாக இருந்து வருகின்றனர். பாகிஸ்தான் அணி உலக சாதனை ஒன்றை தன்வசம் வைத்துள்ளது. ஆனால் தற்போது இந்தியா அந்த சாதனையை முறியடிக்க காத்திருக்கிறது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
சமீப காலமாக இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டில் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பின்னர் இந்திய அணி பல சாதனைகளை முறியடித்து வருகிறது. சொந்த மண்ணிலும், அயல்நாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றி சாதனை படைத்து வருகிறது.
குறிப்பாக தற்போது இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த ஒருநாள் தொடரையும் கூட 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனையைப் படைத்தது இந்தியா.
பாகிஸ்தான் அணியும் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக டி-20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி டி-20 போட்டிகளில் கடைசி 10 தொடர்களில் எந்த தோல்வியும் அடையாமல் புதிய உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளது. ஆனால் அந்த சாதனையை தற்போது முறியடிக்க இந்தியாவிற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பாகிஸ்தானின் இந்த உலக சாதனைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. பாகிஸ்தான் அணி தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
கடந்த மூன்று வருடங்களாக சேஸிங்கில் தோல்வியை சந்திக்காக பாகிஸ்தான், கேப் டவுனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.
நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து டி-20 தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்து வந்ததற்கு தென்ஆப்பிரிக்கா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த சாதனையை முறியடிக்க இந்தியாவிற்கு தற்போது பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியும் கடைசி 10 டி-20 தொடர்களில் எந்த தோல்வியும் அடையவில்லை. தற்போது இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரை மட்டும் இந்திய அணி கைப்பற்றி விட்டால் பாகிஸ்தானின் இந்த சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையை இந்தியா படைக்கும். ஆனால் இந்தியா இந்த தொடரை கைப்பற்றுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.