நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் நேற்று மும்பையிலிருந்து இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தொடங்கும் இந்தச் சுற்றுப்பயணம் ஆனது நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் என அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்வரை நடைபெற உள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியைப் பலரும் "பேவரட்ஸ்" (favourites) எனப் பட்டம் சூட்டி உள்ளனர். முந்தைய ஆஸ்திரேலிய வீரர்களான டீன் ஜோன்ஸ்,மைக் ஹஸ்சி போன்றோர் இந்திய அணி தான் தொடரை வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேலும் பலர் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்குப் பெரும் பாடுபடும் எனக் கூறியுள்ளனர்.
இந்தியா சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நன்கு விளையாடியிருந்தாலும், கடல் கடந்து ஆடுவது என்பது முற்றிலும் மாறுபட்ட விஷயமாகும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா 4-1 எனத் தோற்றிருந்தாலும் அனைத்து போட்டிகளிலுமே தன் போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து இந்தியாவிடம் சில போட்டிகள் போராடி வென்றது என்றே கூறலாம். இந்தியா பந்துவீச்சு முன்பை போல் இல்லாமல் எதிரணிக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.
கடந்த காலத்திற்கு மாறாக இந்தியாவின் பேட்டிங் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனெனில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி மட்டுமே வெளிநாட்டு தொடர்களில் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து பங்காற்றி வருகிறார். மற்றவர்கள் ஓரிரு போட்டிகளில் பங்களித்தாலும் பெரும்பாலான போட்டிகளில் சொதப்பியே உள்ளனர்.
அனல் பறக்கும் வேகப்பந்து வீச்சை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை ஒரு பதம் பார்க்கும். மிச்சேல் ஸ்டார்க்,கம்மின்ஸ், ஹேசல்வுட் எனப் பந்தில் ருத்ர தாண்டவம் ஆட இவர்கள் காத்திருக்கின்றனர். வார்தைச்சண்டை (sledging ) என்ற மோதல் போக்கையும் ஆஸ்திரேலியா அணி கையாளும் என எதிர்பார்க்கலாம்.மூத்த வீரர்களான ரோஹித்,கோலி,புஜாரா மற்றும் ரஹானே போன்றோருக்கு இது ஒரு சவாலாக இருக்காது.ஆனால் பல இளம் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் களம் காண உள்ள நிலையில் ப்ரித்வி ஷாவ், ரிஷாப் பண்ட், விஹாரி போன்றோர் எப்படி இதை எதிர்கொள்ளப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதற்கிடையே ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சு ஜாம்பவானான கிளென் மெக்ராத், ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்யும் என ஆணித்தரமாகக் கூறியுள்ளார். இந்தக் கணிப்பானது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் கூறியதாவது, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாதது ஆஸ்திரேலியாவிற்கு பின்னடைவுதான். அவர்களின் இடத்தைத் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நன்கு ஆடினால் ஆஸ்திரேலிய அணியில் நெடுங்காலம் வரை நீடிக்க அவர்களுக்கு வாய்ப்புண்டாகும் எனவும் கூறினார்.
இது ஒரு பரபரப்பான சீரிஸாக இருக்கும், எனினும் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என அவர் கணித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி விவரம் :-
விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், பிரித்வீ ஷா, புஜாரா, ரகானே, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, பார்த்தீவ் படேல், முரளி விஜய்,அஷ்வின், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார்.