இந்த முறை உலக கோப்பை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு - டு பிளெசிஸ்

1992-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டி
1992-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டி

உலக கோப்பைக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். எல்லா உலக கோப்பையிலும் பலமிக்க அணியாக நுழையும் தென் ஆப்ரிக்கா, ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தால் வெறுங்கையோடு திரும்பிச் செல்லும். 1992-ம் ஆண்டு முதல் உலக கோப்பையில் விளையாடத் தொடங்கிய தென் ஆப்ரிக்கா, அன்றிலிருந்து மழையினால் நியாமற்ற முறையில் ரன் அடிக்க நிர்பந்திக்கப்பட்டோ டக்வொர்த்-லீவிஸ் முறையிலான ரன் ரேட்டை தவறாக கணித்தோ, அறிவற்ற முறையில் ரன் ஓடி அவுட் ஆவதும், கடைசி நேர நெருக்கடியை சமாளிக்க முடியாமலும் உலக கோப்பையிலிருந்து வெளியேறி வருகிறார்கள். கடந்த உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா நிச்சியம் இறுதி போட்டிக்குச் சென்று விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நியூசிலாந்து வீரர் கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெறச் செய்வார். தோல்வியில் அழுத டிவில்லியர்ஸை நாம் நிச்சியம் மறந்திருக்க மாட்டோம்.

இந்நிலையில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பையை இங்கிலாந்து அல்லது இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக தென்னாப்பிர்க்க கேப்டன் டு பிளெசிஸ் கூறியுள்ளார். மேலும் இந்த முறை தங்கள் அணி உலக கோப்பையின் மீது குறைவாகவே எதிர்பார்ப்பு வைத்திருப்பதால் எங்களுக்கு இது அணுகூலம் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

1999-ம் ஆண்டு அரையிறுதிப் போட்டி: தேவையற்ற ரன் அவுட்டால் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா
1999-ம் ஆண்டு அரையிறுதிப் போட்டி: தேவையற்ற ரன் அவுட்டால் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா

ஒவ்வொரு தடவையும் அதிக எதிர்ப்பார்ப்போடு வந்து வெறும் கையோடு செல்வதால் இந்த முடிவா என்று கேட்டால், "இருக்கலாம். நம் மீது எதிர்பார்ப்பு இருக்கும் போது கட்டாயம் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நம்மையும் அறியாமல் நம் மீது அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் இந்த முறை குறைவான எதிர்பார்ப்பில் செல்கிறோம்" என்கிறார் டு பிளெசிஸ். ஒரு நாள் போட்டி அணிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை தொடங்கியதும் நிச்சியம் கடந்த கால தோல்விகளை ஊடகங்கள் பெரிதுபடுத்திப் பேசும் என்பதை அறிந்து வைத்துள்ள டு பிளெசிஸ், "எல்லா அணிகளையும் விட நம் அணி தான் பலமானது என்ற நம்பிக்கையில் கடந்த காலங்களில் சென்றுள்ளோம். மைதானத்திற்குள் இறங்குவதற்கு முன்பு எல்லா அணியும் பலமான அணி தான். ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் தானே விளையாடப்படுகிறது. எதிரணிகள் இப்போது எங்களை பலமில்லாத அணியாகவே பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் உலக கோப்பையில் ஆடத் தொடங்கியதும் ஊடகங்களும் எதிரணியும் எங்கள் அணியை பற்றி பேசத் தொடங்கி விடுவார்கள்" என்கிறார்.

இந்த வருட உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் 10 இளம் புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி டு பிளெசிஸ் கூறுகையில், "அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் நடந்தது எனக்கு இன்றும் நன்றாக நினைவுள்ளது. கோப்பையை வெல்வதற்காக நாம் செலவழித்த ஆற்றலும் கடினமான முயற்சியும் தோல்வியில் முடியும் போது ஏற்படும் வலியை வார்த்ததையால் கூற முடியாது. இறுதியில் நீங்கள் தகர்ந்து விடுவீர்கள்" என்றார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 2015-ம் ஆண்டு அரையிறுதிப் போட்டி
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 2015-ம் ஆண்டு அரையிறுதிப் போட்டி

மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு கேப்டனாக, வெற்றி பெறுவதற்காக வீரர்கள் ஒவ்வொருவரும் சூப்பர் மேனாக மாற முயற்சிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது. களத்திற்குள் சென்று தங்களால் முடிந்ததை அவர்கள் செய்தாலே போதும்" என்றார்.

1992-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போல் இந்த முறையும் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் படி 10 அணிகளும் ஒவ்வொரு அணியோடு மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குச் செல்லும். தென் ஆப்ரிக்கா தனது முதல் போட்டியில் உலக கோப்பையை நடத்தும் நாடான இங்கிலாந்து அணியோடு மே 30-ம் தேதி மோதுகிறது.

Quick Links