இந்திய அணி அபார வெற்றி... பவுலிங், பேட்டிங்கில் மாஸ் காட்டியது இந்தியா 

India Won 3rd T20I
India Won 3rd T20I

முதல் டி20-யில் மழை ஆஸ்திரேலியா அணிக்குச் சாதகமாக அமைந்தது. தொடர்ந்து எட்டாவது டி20 தொடரை இந்தியா வெல்லும் வாய்ப்பை 2-வது டி20–யில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த மழை தடுத்தது. ஆனால் தொடரைத் தோல்வியின்றி முடிக்க இருந்த வாய்ப்புகளை அற்புதமாகப் பயன்படுத்தியது இந்திய அணி.

பந்தைச் சேத படுத்திய விவகாரத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா அணியின் ஆட்டம் மிகவும் சராசரியாகவே இருந்தது. தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நம்பிக்கை அடைந்திருந்தது ஆஸ்திரேலிய அணி. 2 வது போட்டியில் மழை வந்து ஆஸ்திரேலியாவை காப்பாற்றியது. மூன்றாவது மற்றும் இறுதி T20I போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. காயமடைந்த பில்லி ஸ்டான்லேக்கிற்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டார்.

டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆஸிஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டி ஆர்சி ஷார்ட் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். ஆனால் பின்னர் வந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலியா அணிக்குப் பெரிய தடுமாற்றத்தை கொடுத்தது. குருனால் பாண்டியா 4 விக்கெட்கள், குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுக்க ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் நிலைகுலைந்தது.

இருப்பினும் ஆஸ்திரேலியா அணியின் லோவர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியைச் சரிவிலிருந்து சற்று மீட்டனர். ஸ்டோய்னிஸ் 15 பந்துகளில் 25 ரன்களும், நேதன் குல்டர்-நைல் 7 பந்துகளில் 13 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்க்கு 164 ரன்கள் குவித்தது. நேதன் குல்டர்-நைல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரின் இறுதிநேர ஆட்டம் ஆஸ்திரேலியா அணிக்குப் பெரிதும் கைகொடுத்தது. விராட் கோலி தலைமையிலான இந்தியா அணிக்கு 165 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கியது.

தவான் மற்றும் ஷர்மா ஜோடி தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கியது. ஷர்மா 2 சிக்ஸ் உட்பட 16 பந்துகளில் 23 ரன்கள், ஷிகர் தவான் 2 சிக்ஸ் உட்பட 22 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தனர். இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிதும் உதவியாக அமைந்தது.

பின்னர் வந்த கோலி மற்றும் ராகுல் நிதானமாக ஆடினர். ராகுல் 20 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பண்ட் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. அடுத்து வந்த கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார் கோலி. 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார் கோலி. கோலி-கார்த்திக் ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. கோலி 41 பந்துகளில் 61 ரன்களும், கார்த்திக் 18 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 2 பந்துகள் மீதம் இருக்கையில் 165 என்ற இலக்கை எட்டியது இந்திய அணி. தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இந்திய அணி. தொடர்ந்து எட்டாவது டி20 தொடரை இந்தியா வெல்லும் வாய்ப்பை இழந்தாலும், சமன் செய்து சாதித்தது இந்தியா. கடைசியாக இந்தியா பங்கு பெற்ற 10 டி20 தொடர்களில் ஒரு தொடரில் கூடத் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Links