இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை திருவிழா தொடங்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி நிர்வாகங்களும் தங்கள் நாட்டு அணி வீரர்களை தயார்படுத்திக் கொண்டும் தக்க வியூகங்களை தீட்டிக்கொண்டும் உள்ளனர். மேலும் உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்களின் அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது, ஐசிசி. இது, உலக கோப்பை தொடருக்கான ஆரவாரத்தை சற்று கூடுதலாக்கியது.
அதுபோல, இந்திய அணியும் தகுந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் அனுபவமிக்க மிடில் ஆர்டரையும் சிறப்பான பவுலிங் கூட்டணியையும் கட்டமைத்து வருகின்றது. இருப்பினும், இந்திய அணியின் ஆடும் லெவனில் ஆல்ரவுண்டர்களில் யார் இடம் பெறுவார் என சற்று குழப்பம் நீடித்து வருகிறது.2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் ஒருநாள் அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் ஆல்ரவுண்டர் அஷ்வினுக்கு நிச்சயம் இடம் கிடைக்கப்போவதில்லை.மற்றொரு ஆல்ரவுண்டரான குருணால் பாண்டியாவும் போதிய ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் உள்ளதால் அவருக்கும் அஷ்வின் நிலைமை தான். மேல் குறிப்பிட்ட காரணங்களால் இவர்கள் இருவருக்கும் இந்த பட்டியலில் இடமில்லை.
2019 உலக கோப்பையில் தடம்பதிக்க காத்திருக்கும் சிறந்த மூன்று வீரர்களை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
3.விஜய் சங்கர்:
சமீப காலங்களில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் களம் இறங்கி வருகிறார், தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் சங்கர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றதன் மூலம் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு அடுத்தபடியாக ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார், இந்த சங்கர்.நீண்டகாலமாக
முதல் தர மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று ரன்களை குவித்து வந்தார் .மேலும், இவரின் முதல் தர போட்டிகளின் ஆவரேஜ் 47.70 என்ற வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களை காட்டிலும், தற்போது தனது பவுலிங்கில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளார். இருப்பினும், இவருக்கு குறைந்த வாய்ப்புகள் அளிக்கப்பட்ட காரணத்தால் இவரால் சரியான திறமையை வெளிக்கொணர முடியவில்லை.உலக கோப்பையை கருத்தில் கொண்டு, இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டால், தனது சீரான திறமையை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கலாம்.ஏற்கனவே, ஹர்திக் பாண்டியா போன்ற பவுலிங் ஆல்ரவுண்டர் அணியில் உள்ளதால், ஆடும் லெவனில் இவருக்கான வாய்ப்புகள் குறைவு.
2.ரவிந்திர ஜடேஜா:
கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் இடம்பெற்று வருகிறார், ரவிந்திர ஜடேஜா.தனது பவுலிங், பேட்டிங், பீல்டிங்கில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறப்பாக பங்காற்றி வருகிறார் ஜடேஜா. இருப்பினும், குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் வருகைக்கு பின்னர், ஆடும் லெவனில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.
இவருக்கான இடம் இந்திய அணியில் எப்போதும் உண்டு.உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இணைத்துக்கொள்ள தன்னை தயார்படுத்தி வரும் இவர், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் நிச்சயம் ஆடும் லெவனில் இடம்பிடித்துவிட முடியும். இதுவரை, 147 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1990 ரன்களையும் 171 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் இவரது பவுலிங் எக்கனாமி 4.89 வகையில் உள்ளது.
1.ஹர்திக் பாண்டியா:
சமீபத்தில் 'காபி வித் கரண்' என்னும் நிகழ்ச்சியில் பெண்களுக்கெதிரான சர்ச்சை கருத்தை தெரிவித்து கே.எல்.ராகுலும் ஹர்திக் பாண்டியாவும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகினர். இதனால், பிசிசிஐ கடும் காட்டம் தெரிவித்தது.உலகக்கோப்பை தொடர் நெருங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கியது, இந்திய கிரிக்கெட்டையே உலுக்கியது. ஆனால், எவரும் எதிர்பார்த்திராத வகையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் இடம்பெற்று, தனது பழைய பார்மை வெளிப்படுத்தினார்.
மேலும், 7வது பேட்டிங் வரிசைக்கு தகுந்தவராக பாண்டியாவையே நம்பியுள்ளது, இந்திய அணி. ஏனென்றால், தோனி மற்றும் கேதர் ஜாதவிற்கு அடுத்தபடியாக இவரின் அதிரடி ஏராளமான போட்டிகளில் எடுபட்டுள்ளது. அதுபோல, 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நல்லதொரு பங்களிப்பையும் அளித்துள்ளார், பாண்டியா. அதாவது, இங்கிலாந்து மண்ணின் சீதோஷ்ண நிலை இவரின் பவுலிங்கிற்கு நன்கு உதவும். மேற்கண்டவாறு, உலக கோப்பை தொடரிலும் நல்ல ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 686 ரன்களையும் 42 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
எனவே, மேற்கண்ட மேற்குறிப்பிட்டுள்ள 3 வீரர்களும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்கள்.ஆனால், இவர்கள் மூவருக்கும் ஆடும் லெவனில் கடும் போட்டி நிலவக்கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எழுத்து: கோவலி தேஜா
மொழியாக்கம்: சே.கலைவாணன்