பவுண்டரிகள், விக்கெட்டுகள், சிக்ஸர்கள் என அனல் பறக்கும் தொடர்தான், இந்தியாவில் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர். இந்த ஐபிஎல் தொடரில் பல முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக ஒவ்வொரு அணியிலும் ஏழு வீரர்கள் இந்திய வீரர்களாக தான் இருக்கிறார்கள். அந்த இந்தியர்கள் பல சாதனைகளை ஐபிஎல் தொடரில் படைத்து வருகின்றனர். ஆனால் அந்த இந்திய கிரிக்கெட் வீரர்களில், அதிக ரசிகர்களை கொண்ட ஒரு சில முக்கியமான முன்னணி வீரர்கள் சிலர் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அவர்கள் யாரென்று இங்கு காண்போம்.
#1) தோனி
ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி. தொடர்ந்து 11 வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தலை சிறந்த அணியாக விளங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் தோனி தான். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல வெற்றிகளில், தோனியின் சிறப்பான விளையாட்டும், அணியை வழிநடத்தும் விதமும் முக்கிய பங்களிக்கிறது. ஐபிஎல் தொடரின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார் தோனி. இவ்வாறு புகழ்பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது சற்று வருத்தம் அளிக்க தான் செய்கிறது.
#2) தவான்
தற்போது உள்ள இந்திய அணியின் சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் தவான். ஒருநாள் போட்டிகளில் தொடக்கத்திலிருந்தே அதிரடியை காட்டும் திறமை படைத்தவர். எனவே டி20 போட்டிகளில், இவர் எவ்வாறு விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின், சிறப்பான விளையாட்டு என்பது அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் தவான் சராசரியான தொடக்கத்தை கொடுத்து வந்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 146 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரில் சதம் அடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#3) தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக், தற்போது உள்ள இந்திய அணியில், தோனியின் இடத்திற்கு வருவதற்கு தனது திறமையின் மூலம் கடுமையாக போராடிக் கொண்டு இருக்கிறார். இந்திய அணியின் சில முக்கியமான போட்டிகளில், கடைசி நேரத்தில் வந்து சிறப்பாக விளையாடி கொடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். எனவே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் அவர் சரியாக பயன்படுத்தி, தனக்கென ஒரு நிரந்தர இடத்தை இந்திய அணியில் தற்போது பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தம் 168 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.