உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி இருதரப்பு தொடர்களில் அடுத்தடுத்து பங்கேற்க உள்ளது. தொடர்ச்சியாக சொந்த மண்ணில் பல்வேறு தொடர்களை நடத்துவதற்கு முன்னர், மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணத்தை முடிக்கவுள்ளது, இந்திய அணி. அதன்படி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்க இந்திய அணி அட்டவணை தயார் செய்துள்ளது. தற்போது ஐசிசியால் ஜிம்பாப்வே அணி தகுதி நீக்கம் செய்த நிலையில், அந்த அணிக்கு எதிரான தொடர் நடை பெறுவதற்கான புதிய சாத்தியக்கூறுகள் இல்லை. 5 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 டி20 போட்டிகள் போன்ற நீண்ட தொடர்கள் இந்தியத் துணை கண்டத்தில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு அதிகப்படியான டி20 போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கவிருக்கிறது. இந்திய அணி மேற்கொள்ளவுள்ள 3 உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர்களைப் பற்றி இந்த தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
#1.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்:
உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு உதவும் வகையிலும் இந்த அணிக்கு எதிரான டி20 தொடரை வெல்லும் முனைப்புடன் தனது செயல்பாட்டினை வெளிப்படுத்த உள்ளது, இந்திய அணி. கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி சிறப்பாக தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் இளம் வீரர் சுப்மான் கில் மற்றும் அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே ஆகியோர் தொடரில் அளிக்கப்படாதது சற்று அதிர்ச்சியை அளிக்கிறது என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி உள்ளார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாட ஒரு சரியான பேட்ஸ்மேன் இல்லாமல் தவித்து வந்த நிலையில், தற்போது இந்திய ஏ அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த மனிஷ் பாண்டே மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சீனியர் அணியில் மீண்டும் இணைந்துள்ளனர். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய அணிக்இந்த தொடர் முதல் தொடங்குவது கூடுதல் சிறப்பம்சமாகும். நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளமையால், இந்திய அணியின் பேட்டிங் சோதிக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த ஓராண்டு காலமாக, இலங்கை, வங்கதேசம் மற்றும் உள்நாட்டில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றுள்ளது, வெஸ்ட் இண்டீஸ் அணி. எனவே, இந்த தொடர் இந்திய அணிக்கு நிச்சயம் சவால் அளிக்கும் வகையில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
#2.ஃப்ரீடம் டிராபி:
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கு பின்னர், தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வர உள்ளது. சொந்த மண்ணில் அனைத்து 3 வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தினை வெளிப்படுத்தி வருவதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. உலகக் கோப்பை தொடருக்கு முன்னர், இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடரை இழந்த போதிலும் 2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு விதமான தொடர்களை வென்று சாதித்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல், டி20 தொடரையும் கைப்பற்றியது சாதித்திருந்தது. அப்போது நடைபெற்ற டெஸ்ட் தொடர் மட்டுமே இந்திய அணிக்கு சாதகமாக முடிந்தது. இதற்கு முன்னர், தென் ஆப்பிரிக்க அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்ற போதிலும் டெஸ்ட் தொடரை நூலிழையில் தோற்றது. 2019 உலகக்கோப்பை தொடருடன் டூமினி மற்றும் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாகிர் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு கூடுதல் பாதகமாக அமைந்து உள்ளது. இந்திய துணை கண்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை படைத்துள்ள சாதனைகள் சொற்பமே. எனவே, இந்த தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
#3.நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான தொடர்:
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கு பின்னர், நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது, இந்திய அணி. 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கிய இந்த தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் துவங்க இருக்கின்றது. டெஸ்ட் தொடரை வெல்வதே இந்திய அணியின் முக்கிய நோக்கமாக இருக்கும். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி தனது வெற்றி பார்முலாவை நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரிலும் கடைபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுமுனையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் நியூசிலாந்து அணி, தங்களது சொந்த மண்ணில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக தோற்பது மிகவும் அரிதே. 2016-ம் ஆண்டு முதல் வில்லியம்சன் தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் நடைபெற்றுள்ள நான்கு டெஸ்ட் தொடர்களில் ஒன்றை மட்டுமே இதுவரை இழந்துள்ளது. டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் போன்ற அனுபவ பந்துவீச்சாளர்களில் உள்ளடக்கிய நியூஸிலாந்தின் பந்துவீச்சு மிகுந்த சவால் அளிக்கும் வகையில் செயல்பட உள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய அணி தொடரை வெல்ல ஆகச்சிறந்த போராட்டத்தினை வெளிப்படுத்தும். இதுவரை இல்லாத அளவிற்கு தங்களது பந்துவீச்சு தரப்பினை இந்திய அணி மேம்படுத்தி உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர். எனவே, நியூசிலாந்து அணியின் சொந்தமண் சாதனை விரைவிலேயே தகர்க்கப்படும்.