ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று மும்பை விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.
கிரிக்கெட் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஆஸ்திரேலிய அணியை வெல்வது, அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஆஸ்திரேலியாவை வெல்வது என்பது ஒரு அசாதாரணமான காரியமாகும். கிரிக்கெட் உலகில் பெரும் ஜாம்பவானாக விளங்கி வந்தது ஆஸ்திரேலிய அணி. அப்படிப்பட்ட மாமலையை வென்று காட்டியது நம் தோனி தலைமையிலான இந்திய அணி.
ஆனால் இம்முறை நிலைமை அப்படியே தலைகீழ், இந்திய அணி மலையாகவும் ஆஸ்திரேலிய அணி மடுவாகவும் காட்சிஅளிக்கிறது. காரணம் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட பந்து சேத விவகாரம் தான். நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாதது பெரும் இழப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாது முதன்மை பயிற்சியாளர்கள் விலகல், புதுமுக அனுபவமற்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்குப் பாதகமாக அமைந்துள்ளன.
ஆஸ்திரேலிய அணி:
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள்:
இரண்டிற்கும் ஆரன் பின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் பிக்பேஷ் லீகில் ஜோலித்த பல வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் ஃபார்ம் தான் கேள்விகுறியாக உள்ளது.
பின்ச், டிராவிஸ்ஹெட், மேக்ஸ்வெல், க்ரிஸ் லின் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தாலும் அணியின் வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை. ஷான் மார்ஷ் ஒருவரே அவ்வணிக்காகச் சதம் அடித்த வீரர் ஆவார்.
பந்து வீச்சாளர்களைப் பார்க்கும்பொழுது சற்று பலம்வாய்ந்த அணியாகவே காட்சியளிக்கிறது. ஸ்டார்க், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ், போன்றோர் அணிக்குத் தூண்களாக உள்ளனர்.
தற்போதைய ஃபார்ம்:
பாகிஸ்தான்(வெளியூர்): டி20: தோல்வி.
தென்னாப்பிரிக்கா (உள்ளூர்):டி20: தோல்வி, ஒருநாள்: தோல்வி
டெஸ்ட் அணி:
ஒருநாள் போட்டிகளைப் போன்றே டெஸ்ட் அணியிலும் இவ்வணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது. இதில் அனுபவமுள்ள உஸ்மான் கவாஜா மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோரையே அதிகம் நம்பியுள்ளது.
ஸ்டார்க், ஹேசல்வுட், பேட்கம்மின்ஸ், போன்றோர் டெஸ்ட் அணிக்கும் வலுசேர்க்கின்றனர். நாதன் லயன் சுழற்பந்துவீச்சில் தொல்லை கொடுப்பது நிச்சயம்.
டெஸ்ட் அணிக்கும் டிம் பெய்ன் கேப்டனாக உள்ளார்.
டெஸ்ட் ஃபார்ம்
பாகிஸ்தான் (வெளியூர்): சமன்
இந்திய அணி:
இந்திய அணியைப் பார்க்கும்பொழுது அனைத்து பிரிவுகளிலும் பலம் பொருந்திய அணியாகவே காட்சியளிக்கிறது. பல இளம் வீரர்கள் உள்ளதால் ஃபீல்டிங்கிலும் பலமாகவே உள்ளது.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள்:
இரண்டிற்கும் ஒரே டாப் 3 தான் அதுவும் உலகின் சிறந்த டாப் 3. இந்திய அணியின் பலமும் இதுவே. அதில், ரோஹித் சர்மாவிற்கு இது மூன்றாவது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம். அதனால் இங்கு உள்ள சூழல் நன்கு அத்துப்படி, மேலும் இவரின் தற்போதைய ஃபார்ம் டாப் கியர். கோலியின் ஃபார்ம் ஒரு படிமேல், அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்யக் காத்திருக்கிறார்.
பந்து வீச்சாளர்களைப் பார்க்கும்பொழுது நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. பும்ரா, புவனேஸ்வர் குமார், தற்போதைய புயல் கலில் அகமது ஆகியோர் அசத்தக் காத்திருக்கின்றனர்.
தற்போதைய ஃபார்ம்:
இங்கிலாந்து (வெளியூர்): டி20 : வெற்றி, ஒருநாள்: தோல்வி
மேற்குஇந்தியதீவுகள் (உள்ளூர்):டி20: வெற்றி, ஒருநாள்: வெற்றி
டெஸ்ட் அணி:
வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்றாலே அனைவரும் கேள்வி எழுப்புவது டெஸ்ட் போட்டிபற்றித் தான். அதில் வெற்றி பெறுவதில்தான் மொத்த அணியின் பலத்தையும் குறிக்கப்படும். இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் இம்முறை "ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத பலம் குன்றிய ஆஸ்திரேலிய அணியை வெல்வது நிச்சயம்" என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேப்டன் கோஹ்லி அளித்த பேட்டியில்” இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாகஉள்ளது, ஆனால் பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.
டெஸ்ட் ஃபார்ம்:
இங்கிலாந்து (வெளியூர்): தோல்வி
மேற்கு இந்திய தீவுகள்(உள்ளூர்): வெற்றி
(மும்பை விமானநிலையத்தில் போஸ் கொடுத்தபடி கிளம்பும் இந்திய வீரர்கள்)
அது மற்றுமின்றி 2018 உலககோப்பையை எண்ணியே இந்தத் தொடரில் இரு அணி வீரர்களும் களம் இறங்குகிறனர், கூடவே ஆஸ்திரேலியா என்றால் சீண்டல்களுக்கு பஞ்சமிருக்காது. இவை இரண்டும் பார்க்கும் ரசிகர்களுக்குப் பரபரப்பை ஏற்படுத்துவது நிச்சயம்.