இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை, ஓடிஐ மற்றும் டி20யில் வைட் வாஷ் செய்து தனது ஆதிக்கத்தை செலுத்தியது. இந்திய அணி மண்ணின் மைந்தர்கள் மேற்கிந்தியத் தீவுகளை பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் வீழ்த்தியுள்ளது.
தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22 அன்று சர் விவ் ரிச்சர்டஸன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இருதரப்பு டெஸ்ட் தொடரானது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் டெஸ்ட் சேம்பியன் ஷீப் என்று அறிவித்தபின் மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் டெஸ்ட் சேம்பியன் ஷீப்பில் தனது முதல் வெற்றியை குவிக்க கடுமையாக உழைக்கும் என்பதால் இத்தொடரில் அனல் பறக்கும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
இந்திய டெஸ்ட் அணியானது ஒருநாள்/டி20 அணியை விட சற்று மாறுபட்ட அணியாக இருக்கும். சில டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களுடன் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்கள் இனைந்து அணியில் இடம்பெற்றிருப்பர். கடந்த டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய சில வீரர்கள் தற்போது நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை சரியாக பயன்படுத்தி அணியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
நாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 4 இந்திய வீரர்களைப் பற்றி காண்போம்.
#4 ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 ஸ்பின்னர். அத்துடன் உலக கிரிக்கெட்டில் சிறந்த ஸ்பின்னராக தற்போது வலம் வருகிறார். இவர் இவ்வாறு ஜொலிக்க காரணம், சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் அஸ்வினின் பௌலிங் ஒரே மாதிரியாக இருக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் முதன்மை ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார். ஆனால் சமீப காலமாக நடந்த அந்நிய டெஸ்ட் தொடர்களில் அஸ்வினின் ஆட்டத்திறன் சிறிது மங்கியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவும் இவரைப் போலவே ஒரு சிறப்பான ஸ்பின்னர் அத்துடன் ஆல்-ரவுண்டர் திறனையும் தன்னிடத்தில் கொண்டுள்ளார். எனவே இந்திய அணி ஒரு ஸ்பின்னருடன் டெஸ்ட போட்டிகளில் களம் கண்டால் ரவிச்சந்திரன் அஸ்வின் இயல்பான ஸ்பின்னராக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அஸ்வின் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டியில் பங்கேற்றார். அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் சிறந்த பௌலிங்கை அஸ்வின் மேற்கொண்டு இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இப்போட்டியில் அஸ்வின் தனது பௌலிங்கில் 149 ரன்களை அளித்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எதிர்பாராத விதமாக இதன் அடுத்த போட்டியில் காயம் காரணமாக அஸ்வின் விலகியதால் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
அஸ்வின் கடந்த காலத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் 4 போட்டிகளில் 23.18 சராசரியுடன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இரு சதங்களை கரேபியன் மண்ணில் குவித்துள்ளார். அஸ்வின் மீண்டுமொருமுறை இந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி இந்திய அணி நிர்வாகம் தன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு மாற்ற வேண்டும்.