இந்திய அணியின் வலிமையான சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்ததே எங்களது வெற்றிக்கு காரணம் - இயான் மோர்கன்

Eoin Morgan
Eoin Morgan

தற்போது நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தனது முழு ஆட்டத்திறனையும் வெறிகொண்டு வந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மண்ணின் மைந்தர்களான இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேஸன் ராய் ஆகியோர் ஆரம்பத்தில் தடுமாறி வந்தநிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சரியாக பயன்படுத்தி கொண்டு அடித்து துவைத்தனர். இரு தொடர் தோல்விகளுக்குப் பின்னர் தற்போது ஒரு புது நம்பிக்கை கிடைத்தது போல் உள்ளது என்று இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு எங்களுக்கு மிகுந்த சாதகமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

யுஜ்வேந்திர சகாலை பவர் பிளே ஓவரில் விராட் கோலி கொண்டு வந்த போது ராய் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான அதிரடி ஷாட்களை விளாசித் தள்ளினர். குலீதீப் யாதவின் ஓவரையும் சரியாக விளாசி இவர்களது 20 ஓவர்களிலும் சேர்த்து 160 ரன்கள் குவிக்கப்பட்டது. ஜேஸன் ராயின் ஒரு விக்கெட் மட்டுமே இவர்களது ஓவரில் வீழ்த்தப்பட்டது. யுஜ்வேந்திர சகால் தான் வீசிய 10 ஓவர்களில் 88 ரன்களை அளித்து உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை பந்துவீச்சில் அளித்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான பெருமையை பெற்றார். பென் ஸ்டோக்ஸ்-வும் இரு சுழற்பந்து வீச்சையும் கணித்து ஃபிளாட் ஆடுகளத்தில் சரியான ஷாட்களை விளாசித் தள்ளினார்.

போட்டியின் முடிவில் பேசிய இயான் மோர்கன், இந்திய சுழற்பந்து வீச்சில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டதைக் காணும்போது மிகவும் அருமையாக உள்ளது என்று கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான பங்களிப்பின் மூலமாகவே இங்கிலாந்து அணியால் அதிக ரன்கள் இலக்கை குவிக்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளதாவது,

"டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஒரு சரியான முடிவாகும், அத்துடன் அதற்கேற்றவாறு எங்களது பேட்டிங்கும் சரியாக இருந்தது. ஜேஸன் ராயின் சிறந்த கம்-பேக் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதம் போன்றவை அணிக்கு வலிமையாக அமைந்தது. அத்துடன் தொடர் பார்டனர் ஷீப்கள் மூலமாகவே இங்கிலாந்து அணியால் அதிக இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயிக்க முடிந்தது. இந்திய அணிக்கு அதன் இரு வலிமையான சுழற்பந்து வீச்சாளர்களே பெரும் அச்சுறுத்தல்களாக இருந்தனர், இதனை காண அருமையாக உள்ளது."

மேலும், மிடில் ஓவரில் இந்திய விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து வசம் வெற்றியை மாற்றிய லைன் பிளன்கட்டை புகழ்ந்து தள்ளினார் இயான் மோர்கன். இந்த அனுபவ ஆல்-ரவுண்டர் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா போன்ற முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக ஆட்டத்தின் போக்கு முழுவதுமாக மாறியது.

"லைம் பிளன்கட் கடந்த 4 ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகிறார். குறிப்பாக விக்கெட் வீழ்த்த கடினமான மிடில் ஓவரில் பிளன்கட் சிறப்பான பங்களிப்பை இங்கிலாந்திற்கு அளித்து வருகிறார்.

அனைத்து போட்டிகளுமே சவாலாகத்தான் இருக்கும், இதுதான் உலகக் கோப்பை தொடர். மேலும் இங்கிலாந்து அணி கடின உழைப்பை மேற்கொண்டு இனிவரும் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் என தன் பேட்டியை முடித்தார் இயான் மோர்கன்.

இங்கிலாந்து அணி தனது கடைசி தகுதிச் சுற்றில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாகும். இதில் வெல்லும் அணி தங்களது அரையிறுதியை உறுதி செய்யும்.

Quick Links

Edited by Fambeat Tamil