சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து 3 தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 122 மதிப்பிட்டு புள்ளிகளையும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 123 மதிப்பீட்டு புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்தியா தற்போது உள்ள ஆட்டத்திறனிற்கு கண்டிப்பாக மிக எளிதாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.
இந்திய அணியைப் போல் நியூசிலாந்து உலகக்கோப்பையில் ஒரு தோல்வி கூட பெறமால் ஆதிக்கம் செலுத்தி வரும் காரணத்தால் 116 மதிப்பீட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியயேறிய தென்னாப்பிரிக்கா 109 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது.
உலகக்கோப்பையில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் பாகிஸ்தான் 94 புள்ளிகளுடன் 6வது இடத்தையும், வங்கதேச அணி 92 புள்ளிகளுடன் 7வது இடத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் 78 புள்ளிகளுடன் 8 மற்றும் 9வது இடங்களில் உள்ளது. உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு வெற்றியை கூட ருசிக்காத ஆப்கானிஸ்தான் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளது.
இதற்கிடையில் இந்திய அணி ஜுன் 27 அன்று மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணிக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் 2 ல் கண்டிப்பாக வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து விடும். உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் முன்னணியாக திகழ்ந்தது. ஆனால் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடைசி இரு போட்டியில் இங்கிலாந்து வென்றால் மட்டுமே முதல் 4 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது.
2019 உலகக்கோப்பை தொடரில் மற்றொரு விறுவிருப்பான போட்டி பீர்மிகாமில் உள்ள எட்ஜ்பாஷ்டோன் மைதானத்தில் இரு அணிகளும் மோத உள்ள போட்டியே ஆகும். இப்போட்டியில் நியூசிலாந்து வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். பாகிஸ்தான் வென்றால் உலகக்கோப்பை தொடரில் பரபரப்பு தொடரும். மேலும் வங்கதேசம் சிறப்பான ஆட்டத்தை தகுதிச் சுற்றில் வெளிபடுத்தியதன் மூலம் அந்த அணிக்கும் அரையிறுதி வாய்ப்பு நீடித்து உள்ளது. அத்துடன் பாகிஸ்தானை விட நல்ல நெட் ரன் ரேட்டை தன்வசம் வைத்துள்ளது.
இங்கிலாந்து மே 2018 முதல் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. தற்போது ஒருநாள் தரவரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளதால் இதே நம்பிக்கையுடன் இந்திய அணி தனது அடுத்த உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.