2018 ஐசிசி T20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தனது குரூப் B போட்டிகளில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லந்து மகளிர் கிரிக்கெட் அணிகளை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் தனது குரூப் B போட்டிகளில், நேற்று மூன்று முறை (2010, 2012, 2014) சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன்ப்ரீட் கவுர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி மற்றும் T20 போட்டிகளில் இந்தியாவிலேயே அதிக ரன்கள் குவித்த மித்தாலி ராஜ் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக முதலில் விக்கெட் கீப்பர் டானியா பாட்டியா மற்றும் துணை தலைவி ஸ்மிருதி மாந்தனாவும் களம் இறங்கினர். டானியா பாட்டியா 2 ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவரும் 6 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.
பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவி ஹர்மன்ப்ரீட் கவுர் மற்றும் துணை தலைவி ஸ்மிருதி மாந்தனாவும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீட் கவுர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய வேதா கிருஷ்ணமூர்த்தி, தயாலன் ஹேமலதா, அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி ஷர்மா சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு பக்கம் விக்கெட்கள் விழுந்த நிலையில் மறுபக்கம் துணை ஸ்மிருதி மந்தானா அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 167 ரன்கள் குவித்தனர்.
168 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி சீரான இடைவெளியில் தனது விக்கெட்களை இழந்தனர். 19 ஓவர்களில் 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெற்றி பெற 50 ரன்கள் தேவைப்பட்டது. மேலும் இரண்டு விக்கெட்களை ஆஸ்திரேலியா அணி பறிகொடுத்தது. இறுதியாக ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியால் 9 விக்கெட்கள் இழப்பில் 119 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியில் அதிக பட்சமாக எல்லி பெர்ரி 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இந்த வெற்றியின் மூலம் தனது குரூப் B போட்டிகளில் முதலிடத்தை பிடித்தது. 55 பந்துகளில் 83 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தானா ஆட்ட நாயகி விருதை தட்டிச்சென்றார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத்தீவு மகளிர் கிரிக்கெட் அணிகள் அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.