இன்று சிட்னியில் இந்தியா நிகழ்த்திய சாதனை துளிகள்

Australia v India - 4th Test: Day 4
Australia v India - 4th Test: Day 4

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 622/7 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் புஜாரா மற்றும் பண்ட் அபாரமாக ஆடி சதம் அடித்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்திருந்தது. இந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

உணவு இடைவேளை வரை மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் உணவு இடைவேளைக்கு பின்பு தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸின் விக்கெட்டை இழந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தேநீர் இடைவேளையின் போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் மீண்டும் தடைபட்டது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அவற்றில் மூன்று சாதனை துளிகளை நாம் இப்பொழுது காண்போம்.

குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள்:

நேதன் லயன் மற்றும் ஜோஸ் ஹேசல்வுட்டின் விக்கெட்டுகளை வீழ்த்தியது மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆசியாவிற்கு வெளியே அனைத்து விதமான போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நாட்டிங்காமில் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அதே தொடரில் மான்செஸ்டர் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

13 வருடங்களில் முதல்முறையாக ஃபாலோ ஆன்:

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி கேப்டன் ஆஸ்திரேலியாவை மறுபடியும் ஆடுமாறு அழைத்தார். கடந்த 13 வருடங்களில் ஆஸ்திரேலிய அணியை பாலோ ஆன் செய்ய வைத்த முதல் அணி இந்தியா என்ற பெருமையைப் பெற்றது. கடைசியாக 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆன் ஆனது குறிப்பிடத்தக்கது. மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்டில் விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்தது இருப்பினும் அவர், அதனை உபயோகிக்கவில்லை ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து 2 முறை ஃபாலோ ஆன் கேப்டன் என்ற பெருமையை பெற்றிருப்பார்.

30 வருடங்களுக்குப் பிறகு ஃபாலோ ஆன்:

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் ஆனது கடந்த 30 வருடங்களில் இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு 1988 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் ஆனது. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி மிகுந்த சரிவை கண்டு வருகிறது.

இன்னும் ஒரே நாள் எஞ்சிய நிலையில் சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்டில் இந்திய அணி தோற்க வாய்ப்பில்லை. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றியின் மூலம் கடந்த 71 வருடங்களில் எட்டப்படாத சாதனையை படைக்கும். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும். எனவே இந்திய ரசிகர்கள் ஆவலோடு ஐந்தாம் நாளை எதிர்நோக்கி உள்ளனர்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now