இந்திய அணியின் அடுத்து சுவர் எனக் கருதப்படும் சட்டேஸ்வர் புஜாரா பிறந்த தினம் இன்று. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா இந்திய அணி தொடரை வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்நாயகன் விருதையும் அவர் பெற்றார். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடுவதற்கு புஜாராவும் ஒரு முக்கிய காரணி ஆவார்.
இன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடும் புஜாரா சில சாதனைகளை இங்கு காண்போம்.
1. புஜாரா முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் 2,000 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் 2,043 ரன்கள் எடுத்தார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் ரோஜர்ஸ் 2,391 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்
2. தென்னாப்பிரிக்காவில் விராட் கோலியுடன் அவர் அடித்த 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் தென்னாப்பிரிக்காவில் இந்திய ஜோடி எடுத்த மூன்றாவது அதிகபட்ச ரன்களாகும்
3. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
4. தென்னாப்பிரிக்காவில் அவர் அடித்த 153 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் இந்தியர் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்.
5. ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 500 பந்துகளை,சந்தித்த ஒரே இந்தியர்.
6. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் இவரைச் சாரும். உலக அளவில் சாதனை புரிந்த ஒன்பதாவது வீரர் புஜாரா.
7. 2017ஆம் ஆண்டு சீசனில் புஜாரா 1605 ரன்கள் குவித்தார். இது இந்திய முதல் தர போட்டியில் ஒரு சீசனில் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்.
2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் புஜாரா. உலகக்கோப்பைக்கு பின்பு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணிக்கு முக்கிய தூணாக விளங்குகிறார் புஜாரா. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெல்ல வேண்டுமென்றால் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அந்நிய நாடுகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டை கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முறியடித்தார். களத்தில் ராகுல் டிராவிட்டை போன்று நெடுநேரம் நின்று ஆடுவதால் இவரை கிரிக்கெட் ஆர்வலர்கள் அன்போடு இரண்டாவது சுவர் என்று அழைக்கின்றனர்.
கடந்த ஓராண்டில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மொத்தம் 4 டெஸ்ட் களை வென்றுள்ளது. வெற்றி பெற்ற அந்த 4 டெஸ்டிலும் அரை சதத்திற்கு மேல் அடித்த ஒரே வீரர் புஜாரா என்பது அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும். மீண்டும் அடுத்த டெஸ்ட் தொடர் உலக கோப்பைக்கு பின்பு தொடங்க உள்ளதால் இந்த இடைவெளியை அவர் நன்கு பயன்படுத்தி அவர் ஆட்டத்தை மென்மேலும் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.