இந்திய ஆண்கள் அணியை போன்று இந்திய பெண்கள் அணியும் தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாசில் வென்ற இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீராங்கனைகளாக அனுபவம் வாய்ந்த சுசி பேட்ஸ் மற்றும் சோப்பி டெவின் களமிறங்கினர். இந்திய அணி வீராங்கனைகளின் பந்துவீச்சை இந்த ஜோடி சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது. ஸ்கோர் 67 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. சிறப்பாக ஆடி வந்த டெவின், தீப்தி ஷர்மாவின் சிறப்பான பீல்டிங்கில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன்பிறகு நியூசிலாந்தின் சரிவு ஆரம்பித்தது. இந்திய வீராங்கனைகள் தங்களது சிறப்பான சுழற்பந்து வீச்சின் மூலம் நியூசிலாந்து அணியை தடுமாற செய்தனர். சுசி பேட்ஸ் 36 ரன்களில் தீப்தி ஷர்மா பந்துவீச்சில் கோஸ்வாமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கி சிறப்பாக ஆடி வந்த கேப்டன் சாத்தேர்வேட் 31 ரன்களில் பூனம் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன் பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் மற்றும் ஏக்தா பிஷிட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சில் நியூசிலாந்து வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அமிலா கெர் 28 ரன்களும், பின் வரிசையில் களமிறங்கிய ஹென்னா ரோ 25 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
முடிவில் நியூசிலாந்து பெண்கள் அணி 48.4 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ் மற்றும் ஏக்தா பிஷிட் தலா 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மந்தனா மற்றும் ரோடிரிகஸ், நியூசிலாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க நியூசிலாந்து கேப்டன் சாத்தேர்வேட் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தும் பிரிக்க முடியவில்லை. அதிரடியாக விளையாடிய மந்தனா 43 பந்துகளில் தனது 14 ஆவது ஒருநாள் போட்டி அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோடிரிகஸ் 61 பந்துகளில் தனது முதல் ஒருநாள் போட்டி அரைசதத்தை கடந்தார்.
இவர்களது சிறப்பான ஆட்டத்தின் முன்பு நியூசிலாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சு முற்றிலும் எடுபடாமல் போனது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 101 பந்துகளில் தனது நான்காவது ஒரு நாள் போட்டி சதத்தை எட்டினார்.
இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அனைவரும் எண்ணியபோது சிறப்பாக ஆடிய மந்தனா 105 ரன்களில் ஆட்டமிழந்தார். மந்தனா-ரோடிரிகஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. மந்தனா ஆட்டமிழந்த 4 பந்துகளில் இந்திய அணி வெற்றியை ருசித்தது.
33 ஓவர்களில் இந்திய பெண்கள் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோடிரிகஸ் 81 ரன்களுடனும் தீப்தி ஷர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் அமிலா கெர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய பெண்கள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்திய இந்திய வீராங்கனை ‘ஸ்மிரிதி மந்தனா’ ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.