ஒரு சிறந்த டவுன்-ஆர்டர் பேட்ஸ்மேன், இளம் விக்கெட் கீப்பர் என தன் திறமைகளை இளம் வயதிலேயே வெளிக்கொணர்ந்து பற்பல சாதனைகளை புரிந்து வருகிறார், இந்த இளம் வீரர் ரிஷாப் பன்ட். மைதானத்தில் பல சிக்சர்களை பறக்கவிடும் இவர், “இடது கை சேவாக்” என்று பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் புகழப்படுகிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளிலும் ஐபிஎல் தொடர்களிலும் நன்கு ஜொலித்த இவர், தற்போது இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்து அணியின் இன்றியமையாத வீரராகவே ஆகிவிட்டார். கடந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக களமிறங்கி, 684 ரன்களையும் 50 என்ற மிகச்சிறந்த ஆவ்ரேஜையும் வைத்துள்ளார் .மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 170 என்னும் அளவில் வியக்கத்தக்க வகையில் உள்ளது. முதன் முதலில் டி20 போட்டிகளில் தான் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் சமீப காலங்களில், நீண்டகால கிரிக்கெட் போட்டியான டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தான் சளைத்தவன் அல்ல என்று நிரூபித்து வருகிறார், இந்த பேன்ட்.தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் அதிரடியாக சதத்தை பதிவு செய்து இந்திய அணியை நிலைநிறுத்தியதே, இவரது திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
அவ்வாறு, இந்த குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையிலேயே ரிஷாப் பண்ட் படைத்த 5 சாதனைகளைப் பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
#1 முதல் டெஸ்ட் ரன்னே சிக்சர்:
கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது, டெஸ்ட் விக்கெட் கீப்பரான விரித்திமான் சஹாவுக்கு பதிலாக ரிஷாப் பன்ட் டெஸ்ட் அணியில் இடம்பெற்றார். தனது முதல் டெஸ்ட் போட்டியில், பேட்டிங் செய்கையில் ரஷீத் வீசிய முதல் பந்தில் தடுத்து ஆடி, எவரும் எதிர்பார்த்திராத வகையில் அடுத்த பந்திலேயே சிக்சரை அடித்தார். இதுவே அவர் குவித்த முதல் சர்வதேச டெஸ்ட் ரன் ஆகும். மேலும், தனது முதல் டெஸ்ட் ரன்னை சிக்சரில் அடித்ததன் மூலம், இது ஒரு இந்திய சாதனையாகவும் கருதப்படுகிறது.
2 .ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர்:
தற்போது நடைபெற்று வரும் பார்டர்- கவாஸ்கர் டிராபியின் அடிலெய்டில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 கேட்ச்களையும் இரண்டாவது இன்னிங்சில் 5 கேட்ச்களையும் என மொத்தம் 11 கேட்ச்களை பிடித்தார். மேலும், அந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகும். ஒரு போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சமன் செய்தார். ஏற்கனவே, இந்த சாதனையை டிவில்லியர்ஸ் மற்றும் ஜாக் ரசல் ஆகியோர் தலா 11 கேட்ச்களை பிடித்துள்ளனர்.