கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அதில் பல மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்துவிடும். அப்படிப்பட்ட நிகழ்வுகள் இந்த வருடமும் தவறாமல் நிகழ்ந்துள்ளன. அவற்றைப் பற்றி இங்கு காணலாம்.
#1 எழுச்சி கண்ட ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் உலகிற்கு வந்து சில காலங்களே ஆகின்றது. இந்த குறுகிய காலத்தில் சில சிறப்பு வாய்ந்த வீரர்களை கொண்டு அந்த அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அதில் குறிப்பிடும் வீரர்களாக ரஷீத் கான், நபி, முகமத் ஷசாத் மற்றும் முஜீப்-உர்-ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் நடக்கும் டி20 தொடர்களில் பங்குகொண்டு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்குபெறும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 8 அணிகள் நேரடியாக தகுதிபெற்றுவிட்டன. மீதம் உள்ள இரண்டு இடங்களுக்கு தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடத்தபட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்குபெற்றது.
தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட ஆப்கானிஸ்தான் அணி, பின்பு அதிரடியாக எழுச்சி கண்டு மீதம் உள்ள போட்டிகளை வென்று அதில் முதலிடமும் பெற்றது. இரண்டாவது அணியாக வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற்றது. இந்த இரு அணிகளும் அடுத்த வருடம் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்பது உறுதியாகிவிட்டது. அதில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#2 பந்தை சேதப்படுத்திய விவகாரம் :
இந்த ஆண்டு பூதாகரமாக வெடித்த சம்பவம் என்றால் அது இந்த பந்தை சேதப்படுத்திய சம்பவம் தான். ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுபயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்குகொண்டது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் புதுமுக வீரரான பான்கிராப்ட் கையில் உப்புகாகித்தை வைத்து பந்தை சேதப்படுத்துவது தெரிந்தது. உடனே கள நடுவர்கள் இதைக்கண்டு அவரிடம் வினவினர், அப்போது எதுவும் நடக்காதது போன்று நிலைமையை சமாளித்தார் பான்கிராப்ட்.
பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த தவறை ஒப்புக்கொண்டார் பான்கிராப்ட், மேலும் இதில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோருக்கும் சம்பந்தம் இருப்பதும் தெரியவந்தது. இதைக்கண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்ட் அதிரடி நடவடிக்கையாக வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு ஒரு ஆண்டும், பான்கிராப்ட்-க்கு ஆறு மாதங்களும் சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது.
இந்த சம்பவம் உலக கிரிக்கெட் அரங்கையே ஆட்டிப்படைத்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதில் இருந்து மீளாத ஆஸ்திரேலிய அணி பல தொடர்களை இழந்து தத்தளித்து கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை தொடருக்கு இருவரும் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3 ரன் குவிப்பில் சாதனை படைத்த இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையே ஆன ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதன் மூன்றவது போட்டி நாட்டிங்காம் நகரில் நடந்தது , முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தது. அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டு அந்த அணி ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த தனது முந்தய சாதனையை முறியடித்து யாரும் எதிர்பாக்காத ஹிமாலய ஸ்கோரை அடித்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்து அசத்தியது.
ஒரு கட்டத்தில் 500 ரன்களை தொட்டுவிடும் என்று எண்ணப்பட்டது சில கடைசிகட்ட சிறப்பான பந்துவீச்சால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. இந்த ரன் குவிப்பில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சதம் அடித்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் வித்யாசத்தில் மோசமான தோல்வி அடைந்தது.