தற்போதைய காலகட்டத்தில் தலைசிறந்த வீரர் என அனைவராலும் போற்றப்படும் வீரர் விராத்கோலி தான். அதற்கு காரணம் அவரது அசாத்தியமான பேட்டிங் திறனே. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் விராத்கோலி சிறந்து விளங்குகிறார். தற்போது விளையாடிவரும் வீரர்களிலே அதிக சதங்கள் குவித்த வீரரும் இவரே. தனது பேட்டிங்ல் மட்டுமல்லாமல் கேப்டனாகவும் பல சாதனைகளை படைத்துள்ளார் இவர். இவர் ஓய்வு பெறுவதற்குள் கிரிக்கெட்டில் பெரும்பாலான சாதனைகளை தகர்த்து விடுவார். ஆனாலும் இவரால் முறியடிக்க முடியாத சில சாதனைகள் உள்ளன. அவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.
#1) டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆவ்ரேஜ் ( சர் டான் பிராட்மேன் - 99. 94 )
கிரிக்கெட் வரலாற்றில் விராத்கோலி மட்டுமல்ல எந்தவொரு வீரரும் முறியடிக்க முடியாத சாதனைகளில் ஒன்று தான் டான் பிராட்மேனின் டெஸ்ட் ஆவ்ரேஜ். தற்போதைய டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் அதிக ஆவ்ரேஜ் வைத்திருக்கும் வீரர் ஸ்டீவன் சுமித் ( ஆவ்ரேஜ் 63.75 ) அவராலும் இந்த சாதனையை முறியடிப்பது மிக கடினம். விராத்கோலியின் தற்போதைய டெஸ்ட் ஆவ்ரேஜ் 53.40. இன்னும் அவர் 8-9 ஆண்டுகள் விளையாடினாலும் பிராட்மேனின் ஆவ்ரேஜை தொடுவது முடியாத காரியமே.
#2) சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் 476 ( ஷாகித் அப்ரிடி )
விராத்கோலி ரன்கள் அதிகம் குவித்தாலும் சிக்சர்கள் அந்த அளவிற்கு அடிப்பதில்லை. இதுவரை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது வரை 162 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். அப்ரிடியின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 315 சிக்சர்கள் அவர் அடிக்க வேண்டும். ஆனால் விராத் கேலி தற்போது குறைவான டி20 போட்டிகளிலேயே பங்கேற்கிறார். அதுமட்டுமின்றி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் சிக்சர்கள் அந்த அளவிற்கு அடிப்பதில்லை. எனவே ஷாகித் அப்ரிடியின் இந்த சாதனையை விராத்கோலி முறியடிக்க முடியாது.
#3) ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் - 31 பந்துகள் ( ஏபி டிவில்லியர்ஸ் )
விராத்கோலி சர்வதேச போட்டிகளில் நிலைத்து நின்று ஆடும் வல்லமை பெற்றவர். அவர் பெரிய அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தமாட்டார். ஒருநாள் போட்டிகளில் இன்றளவும் இந்த சாதனையை மற்ற எந்த வீரரும் முறியடிப்பது மிகக் கடினமே. விராத் கோலியை பொருத்த வரை இலக்கு அதிகமாக இருந்தால் ஒருநாள் போட்டிகளில் அதிரடியைக் காட்டுவார். ஆனால் 30 பந்துகளில் சதமடிக்கும் சூழ்நிலைகளும் இவருக்கு அமைய வாய்ப்பில்லை. எனவே இந்த சாதனையை இவர் முறியடிப்பது முடியாத காரியமே.
#4) சர்வதேச போட்டிகளில் அதிக அரைசதங்கள் - 164 ( சச்சின் டெண்டுல்கர் )
சர்வதேச போட்டிகளை பொருத்தவரையில் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் (100 சதங்கள் ) என்ற சாதனையை விராத்கோலி விரைவில் முறியடித்து விடுவார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் சர்வதேச போட்டிகளில் அதிக அரைசதங்கள் என்ற சாதனையை முறியடிப்பது கடினமே. காரணம் விராத்கோலி தான் அடிக்கும் அரைசதங்கள் அனைத்தையும் சதங்களாக எளிதில் மாற்றும் வல்லமை பெற்றவர். அவர் ஒருநாள் போட்டிகளில் கடைசியாக அடித்த 11 அரைசதங்களில் 8-யை சதங்களாக மாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனான பின் அரைசதங்களைக் காட்டிலும் அதிக சதங்களே குவித்து வருகிறார். இதுவரை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 80 அரைசதங்களும், 56 சதங்களும் குவித்துள்ளார். எனவே அவரால் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மிகக்கடினமே.