2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ப்ளே ஆப் சுற்றுகள் இன்று முதல் தொடங்கவிருக்கின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன. இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரை மணி நேரம் முன்னதாக 7.30 மணிக்கு துவங்க இருக்கின்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இப்போட்டியில் தோற்கும் அணி, 2-வது தகுதி சுற்றில் விளையாட வேண்டும். இதனைத் தொடர்ந்,து நாளை "எலிமினேட்டர்" எனப்படும் வெளியேற்றுதல் சுற்று நடைபெறும். இந்தப் போட்டியில் புள்ளி பட்டியல் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன.
என்னதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம்போல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும், அணியின் ஆடும் லெவனில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். நடப்பு தொடரில் பல போட்டிகளில் சென்னை அணியின் பேட்டிங், எதிர்பார்த்ததற்கு குறைவாக தான் செயல்பட்டிருக்கிறது. அணியில் சுரேஷ் ரெய்னா, டுபிளிசிஸ் மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் பேட்டிங்கையே பெரிதளவும் நம்பியுள்ளது. காயம் ஏற்பட்டதால் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளார், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ். அணியில் கடந்த சீசனில் ஜொலித்த வீரர்கள் சிலர் நடப்பு தொடரில் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, பரபரப்பான இன்றைய முதலாவது தகுதி சுற்றில் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி வீரர்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கிறது.
#3.பிராவோ:

டி20 போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டரான வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ, கடந்த தொடர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால், நடப்பு தொடரில் தன்னால் முடிந்த பங்களிப்பினை அளிக்கத் தவறி வருகிறார், பிராவோ. இதுவரை 9 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார். மேலும், ஆட்டத்தின் இறுதி கட்ட நேரங்களில் பந்து வீசுவதில் சிறந்தவரான இவர், நடப்பு தொடரில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். மும்பை அணிக்கு எதிரான இரு போட்டிகளின் இறுதிக் கட்ட ஓவர்களில் 20வது ஓவரை வீசிய இவர் முறையே 29 மற்றும் 17 ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார். இது இன்றைய போட்டியிலும் தொடர்ந்தால், மும்பை அணி தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வர்.
#2.அம்பத்தி ராயுடு:

2018 ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரரான அம்பத்தி ராயுடு, சிறப்பான ஐபிஎல் தொடரால் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்று கடந்த ஓராண்டு காலமாக விளையாடி வந்தார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தக்கவைக்கப்பட்டு தொடர்ந்து களமிறக்கப்பட்டும் வருகிறார். இவர் விளையாடியுள்ள 14 போட்டிகளில் 219 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 90. 49 என்ற அளவில் மிக மோசமாக உள்ளது. எனவே, இன்றைய போட்டியிலாவது இவர் தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
#1.ஷேன் வாட்ஸன்:

2018 ஐபிஎல் தொடரில் 555 ரன்களை குவித்து அட்டகாசப்படுத்தினார், இந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர். அவற்றில் இரு சதங்களையும் அடித்து நொறுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் மட்டுமே இவர் குவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 96 ரன்களை அடித்த இவர் மற்ற எந்த லீக் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடவில்லை. அணி நிர்வாகம் இவர் மேல் வைத்துள்ள நம்பிக்கையால் தொடர்ந்து ஆடும் லெவனில் ஒரு போட்டியில் கூட கழற்றிவிடப்படவில்லை. எனவே, ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ள இவர் இன்றைய போட்டியில் இருந்து தான் இழந்த பேட்டிங் பார்மை கடந்து மீண்டு எழுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.