தற்போது நடந்து வரும் 12-வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பெங்களூரு அணிக்கு ஐபிஎல் கோப்பையை வெல்வது எட்டாக்கனியாகவே உள்ளது. கோலி, டிவில்லியர்ஸ் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் பெங்களூரு அணிக்கு ஐபிஎல் கோப்பை இன்னும் கனவாகவே உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்று தற்போதைய பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள மூன்று வீரர்கள். யார் அந்த வீரர்கள் ? அவர்களைப்பற்றி இத்தொகுப்பில் காண்போம்.
#1.பார்த்தீவ் பட்டேல்:
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான பார்த்தீவ் பட்டேல், ஐ.பி.எல்-இல் பல அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதுவரை அவர், மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். 2010ல் நடந்த ஐபிஎல் தொடரில் பார்த்தீவ் பட்டேல் , சென்னை அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2011ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக விளையாடினார். பின்னர், 2015 ஆம் ஆண்டு வரை ஐபிஎல்-இல் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி வந்தார். 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது அந்த அணி இரண்டு முறை (2015 & 2017) சாம்பியன் பட்டத்தை வென்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் பார்த்தீவ் பட்டேல், ஏற்கனவே 3 முறை ஐபிஎல் கோப்பையை ருசித்துள்ளார். ஆனால், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களான கோலி, டிவில்லியர்ஸ் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாதது வியப்பை அளிக்கிறது.
#2.உமேஷ் யாதவ் :
வலது கை வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ், தனது முதல் ஐபிஎல் பயணத்தை 2009-இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலிருந்து தொடங்கினார். அவர் 2013ஆம் ஆண்டு வரை தொடர்ந்து டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். 2014இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். 2014-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. உமேஷ் யாதவ் ருசி பார்த்த முதல் ஐபிஎல் கோப்பையும் அதுதான். கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்ல உமேஷ் யாதவின் அபாரமான பந்து வீச்சும் ஒரு காரணம். 2014 ஆம் ஆண்டிற்குப் பின் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை பெறவில்லை. 2018 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக தேர்வு செய்யப்பட்டார், உமேஷ் யாதவ். அந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி பிரகாசிக்கவில்லை. கடந்த சீசனை போலவே தற்போதைய ஐபிஎல் சீசனிலும் ஆர்சிபி அணிமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
#3. குல்வந்த் கெஜ்ரோலியா:
ராஜஸ்தானைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான குல்வந்த் கெஜ்ரோலியாவை 2017-இல் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. எனினும், அந்த சீசனில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த சீசனில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2018-இல் பெங்களூரு அணி குல்வந்த்தை ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் அவருக்கு மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது, எனினும் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆதலால், ஏனைய போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2019 ஐபிஎல் சீசனிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குல்வந்த்தை தக்க வைத்துக் கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த பொழுது ஐபிஎல் கோப்பையை ருசிபார்த்த குல்வந்த் கெஜ்ரோலியா, தற்பொழுது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ளார்.
ஐபிஎல் கோப்பையை ருசி பார்த்த மூன்று வீரர்கள் பெங்களூரு அணியில் இருந்தும் அந்த அணி இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் வேதனையை அளிக்கிறது.