கடந்த ஐபிஎல் தொடரில் ஜொலித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நிகிடி 2019 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த காயம் இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டியில் இவருக்கு ஏற்பட்டது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில் இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சென்னை அணி மார்ச்-23 அன்று தொடங்கவுள்ள 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் பங்கேற்று எகானமி ரேட் 6வுடன் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் இவரை மிஸ் செய்யும்.
டேவிட் வில்லி மட்டுமே இவருக்கு அடுத்தபடியான மற்றொரு வெளிநாட்டு பந்துவீச்சாளர். எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் லுங்கி நிகிடி-க்கு பதிலாக கூடிய விரைவில் மாற்று வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் இங்கு லுங்கி நிகிடி-க்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்க வாய்ப்புள்ள 3 வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி காண்போம்.
#3 மார்க் வுட்
மார்க் வுட் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இவர் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே விளையாடினார். அதற்குப் பிறகு இவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. அந்த போட்டியில் தனது முதல் 2 ரன்கள் மட்டுமே அளித்து அதிரடி தொடக்கத்தை அளித்தார். ஆனால் அதற்கு பிறகு இவர் வீசிய 3 ஓவரில் பாண்டியா சகோதரர்களால் 47 ரன்கள் விளாசப்பட்டது.
கடந்த ஐபிஎல் சீசனில் கேதார் ஜாதவ் காயம் காரணமாக விலகியதால் வெளிநாட்டு வீரர் டேவிட் வில்லி அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டார். இதனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியிலிருந்து ஒரு வெளிநாட்டு வீரரை நீக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது சென்னை அணி. ஏனெனில் ஒரு அணியில் 8 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் இருத்தல் கூடாது என்ற விதி உள்ளதால் டேவிட் வில்லி-யை தக்க வைத்துக் கொண்டு மார்க் வுட்-ஐ ரிலிஸ் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
மார்க் வுட்-டின் தற்போதைய ஆட்டத்திறன் மிகவும் பாரட்டும் வகையில் உள்ளது. இவர் கடைசியாக இந்த வருடத்தில் மார்ச் மாதம் 10 ஆம் நாள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச டி20யில் விளையாடினார். அந்த தொடரின் 3வது டி20 போட்டியில் 3 ஓவர்கள் வீசி 9 ரன்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அத்துடன் மற்றொரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டேவிட் வில்லி 3 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மார்க் வுட் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் 4 போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் சீராக வீசும் திறமை பெற்றுள்ளார். சென்னை அணியின் பௌலிங் லைன்-அப்ற்கு உகந்ததாக இவர் இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கடைசியாக இவரது சர்வதேச பௌலிச்கை வைத்து மற்றொரு வாய்ப்பு அளித்தால் லுங்கி நிகிடி-க்கு தகுந்த மாற்று வீரராக மார்க் வுட் செயல்படுவார்.