ஐ.பி.எல் 2019: கவனிக்கப்பட வேண்டிய 3 வெளிநாட்டு வீரர்கள்

 லிம் லிவிங்ஸ்டோன்
 லிம் லிவிங்ஸ்டோன்

இந்திய பிரீமியர் லீக் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் செல்வந்த கிரிக்கெட் லீக். உலகெங்கிலும் இருந்து வீர்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவம். இந்த முறை 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு சற்று முன்னதாக நடைபெறுவதால், பல முன்னனி வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.இல் முழு தொடரிலும் பங்கேற்பது சந்தேகமே. உலகக்கோப்பை அணியில் இடம் பெற தவறும் வீர்கள் ஐ.பி.எல்.இல் தொடர் முழுவதும் விளையாட கூடும். அப்படி கவனிக்கப்பட வேண்டிய மூன்று வெளிநாட்டு வீரர்களை பற்றிய தொகுப்பை காணலாம்.

# 3 லிம் லிவிங்ஸ்டோன்

பல பேருக்கு இவரின் பெயர் புதிதாக இருக்கக்கூடும். ஆனால் இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் மிகவும் பிரபலமான இவர், 2 T20 போட்டிக்காக இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். 25 வயதான இவர், ஒரு ஆல்ரவுண்டர். வலது கை பேட்ஸ்மேனான லிவிங்ஸ்டோன், வேகமாக ரன்களை சேர்க்கக்கூடியதில் வல்லமை பெற்றவர். தனது 21வது வயதிலேயே அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். நாண்ட்விச் அணிக்காக 50 ஓவர் போட்டியில் வெறும் 138 பந்துகளில் 350 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

இதுவரை 51 T20 போட்டிகளில் விளையாடியுள்ள லிவிங்ஸ்டோன் 1110 ரன்களை சேர்த்துள்ளார். அதில் ஒரு சதமும் அடங்கும். கூடவே பௌலிங்கில் 14 விக்கெட்களையும் எடுத்துள்ள இவர், சராசரியாக 16.78 ரன்கள் மட்டுமே வழங்கியுள்ளார்.

வரும் ஐ.பி.எல் 2019 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ள லிவிங்ஸ்டோன், ஆரம்ப தொகையான 50 இலட்சத்திற்கே ஏலம் எடுக்கப்பட்டார். அதிரடி பேட்டிங், லெக் ஸ்பின் என நல்ல ஆளுமை உள்ள இவர் இந்த தொகைக்கு சரியான முடிவே.

#2 காலின் இன்கிராம்

காலின் இன்கிராம் 
காலின் இன்கிராம்

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இடது பேட்ஸ்மேனான இவர், மிகவும் அதிரடியாய் ஆடக்கூடியவர். அதை தாண்டி அணித்தேவைக்கேற்ப ஓரிரு ஓவர்கள் பந்து வீசக்கூடியவர். தென்னாபிரிக்கா அணிக்காக 31 சர்வதேச ஒரு நாள் மற்றும் 9 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச ஒரு நாள் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஒரே தென்னாபிரிக்க வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தொடர்ச்சியான பார்ம் இல்லாத காரணத்தால் அணியில் இடம் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல வெளிநாட்டு T20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவரால் சர்வதேச அணிக்கு போதிய வரவேற்பை பெற்றுத்தரவில்லை.

2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற T20 ப்ளாஸ்ட் லீக் தொடரில் க்ளாமோர்கன் அணிக்காக 8 போட்டிகளில் 402 ரன்கள் குவித்தார், இதில் மூன்று சதங்களும் அடங்கும். மொத்தம் 205 T20 போட்டிகளில் விளையாடியுள்ள இன்கிராம் 5210 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 அரை சதம், 3 சதம் உட்பட ஸ்ட்ரைக் ரேட்டாக 139.11 வைத்துள்ளார். 66 இன்னிங்சில் பௌலிங் வீசிய இவர் 37 விக்கெட்களையும் செய்துள்ளார்.

ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்ற காலின் இன்கிராம், 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிட்டல்ஸ்) அணிக்காக பங்களிப்பை அளித்துள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் 6.4 கோடிக்கு மீண்டும் டெல்லி அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

#1 ஜோ டென்லி

ஜோ டென்லி
ஜோ டென்லி

வலது கை பேட்ஸ்மேனான இவர் பகுதி நேர வலது கை லெக் ஸ்பின்னரும் கூட.32 வயதான டென்லி இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளின் நட்சத்திர வீரர். 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக தனது முதல் போட்டியில் பங்கேற்ற இவர், அதன் பிறகு அணியில் இருந்து புறக்கணிப்பட்டார். சர்வதேச அணிக்காக 9 ஒரு நாள் போட்டி மற்றும் 5 T20 போட்டியில் விளையாடியுள்ளார். பல ஆண்டிற்குப்பிறகு சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற T20 போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு விளையாடி 20 ரன்கள் எடுத்து 4 விக்கெட்களையும் சாய்த்தார். அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

சமீபத்தில் T20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டென்லி, இங்கிலாந்தின் T20 ப்ளாஸ்ட் தொடரில் கென்ட் அணிக்காக பங்கேற்று 12 போட்டிகளில் 409 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டாக 145 வைத்துள்ளார். சர்ரே அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிரணியின் பந்துவீச்சை விளாசி தள்ளிய இவர், அபாரமாக விளையாடி சதம் அடித்தது மட்டும் இல்லாமல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனையும் படைத்தார். மொத்தம் 196 T20 போட்டிகளில் 4904 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 29 அரை சதங்களும் 4 சதங்களும் அடங்கும். பௌலிங்கில் 28 விக்கெட்களை வீழ்த்தியுள்ள டென்லி சராசரியாக வெறும் 19.85 ரன்கள் மட்டுமே வழங்கியுள்ளார்.

கொல்கத்தா அணியால் 1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள டென்லி, 2019ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நட்சத்திர வீரராக மாறுவாரா என்பதை பொறுத்திருந்துப் பார்க்கலாம்.