2019 ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்று ஏமாற்றம் அளித்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2018 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டியில் களம் இறங்கியது. இருப்பினும், சில காரணங்களால் தோல்வியைத் தழுவியது அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் 30 வயதை கடந்த வீரர்களாவர். அவற்றில், சிலர் ஓய்வு பெறும் வயதை நெருங்கிவிட்டனர். அதுபோல ஓய்வு பெறும் தருவாயில் உள்ள கேப்டன் தோனி அடுத்து வரும் ஐபிஎல் சீசனில் நிச்சயம் விளையாட வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ஆட்டத்தில் தொடர்ந்து தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார், தோனி:

கிரிக்கெட் போட்டிகளில் ஜாம்பவான்களான வீரர்கள் ஓய்வு பெறுவதில் எந்த ஒரு ரசிகருக்கும் உடன்பாடில்லை. வயதுகளைக் கடந்து தமது பணியில் சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து விளையாடி வருகிறார், மகேந்திர சிங் தோனி. 37 வயதான இவர் பேட்டிங்கிலும் கீப்பிங் மற்றும் கேப்டன்சியில் சிறப்பாகவே பங்காற்றி வருகிறார். இவர் இந்த ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய 416 ரன்களை குவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பெரும்பாலான வெற்றிகளுக்கு காரணம் தோனி தான் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி உள்ளார். மேலும், ஆட்டத்தை வெற்றிகரமாகவும் முடித்து வருகிறார். அணியில் இவருக்கு நிகர் வேறு எந்த வீரரும் இல்லை என்று கூட சொல்லலாம்.
#2.டோனி இல்லாமல் விளையாட வருங்கால சென்னை அணி தயாராக இல்லை:

தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை நிர்வகித்துவரும் வரும் தோனி, தனக்கு நிகர் தானே என்று பலமுறை நிரூபித்துள்ளார். அணியில் சில திறமையான வீரர்கள் இருந்தாலும் அவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருந்து வருகிறார், தோனி. 2019 சீசனில் சில போட்டிகளில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டிருந்தாலும் வெற்றி அணிக்கு கிடைத்த பாடில்லை. மேலும், அணி நெருக்கடி நிலையை உணர்ந்து தீர்க்கமான முடிவுக்கு வரும் தோனி ஆட்டத்தை பலமுறை மாற்றியுள்ளார். எனவே, வருங்கால சென்னை அணி தோனி இல்லாமல் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை.
#1.டோனிக்கு பதிலாக எந்த ஒரு நீண்ட கால மாற்றம் அணியில் இல்லை:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு மாற்றாக 3 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் தோனியை போலவே சிறப்பாக செயல்படுவார்கள் என்று கூறிவிட முடியாது. முதலாவதாக தமிழகத்தைச் சேர்ந்த நாராயணன் ஜெகதீசன், கடந்த இரு ஆண்டுகளாக சென்னை அணியில் இடம்பெற்று இருந்தாலும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. அணியில் இடம்பெற்ற மற்றொரு விக்கெட் கீப்பர் அம்பத்தி ராயுடு போதிய அனுபவம் இருந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல் இந்த சீசனில் தடுமாறி வந்தார். மேலும், அடுத்த சீசனில் இவர் அணியில் இருந்து விடுவிக்க பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாம் பில்லிங்ஸ், தோனிக்கு மாற்றாக இடம்பெறுவார் என நம்பலாம். இருப்பினும், பேட்டிங்கில் ரன்களை குவிக்க சற்று தடுமாறி வருகிறார். எனவே, இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் அதிக ரன்களைக் குவித்த தோனிக்கு மாற்றாக 3 வீரர்கள் இருந்தபோதிலும் எவரும் இவரைப் போல செயல்படுவார்கள் என்று வெளிப்படையாகக் கூற இயலாது.