2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ளன. சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளுமே ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டு திகழும் அணியாகும். இந்த இரு பெரும் அணிகளுக்கு கேப்டன்களாக உலகக் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சாதித்த அணியாகும். இதுவரை நடந்த 11 ஐபிஎல் சீசனில் 9 சீசனில் பங்கேற்று 3 முறை கோப்பைகளை வென்றுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் எப்பொழுதுமே இந்த தொடரின் அனைவரின் விருப்ப அணியாக திகழ்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட அதிக சாதனைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 22 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 14 போட்டிகளில் சென்னை அணி வென்றுள்ளது. தனது சொந்த மண்ணில் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்ள இருக்கிறது. எனவே எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுமுனையில் சில மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் வரலாற்றை மாற்றி எழுதும் அணியாக வலிமையுடன் திகழ்கிறது. பெங்களூரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு சிறிது கூட பற்றாக்குறை கிடையாது. இந்நாளில் எவ்வளவு வலிமையான அணியையும் ஊதித் தள்ளும் அணியாக திகழ்கிறது பெங்களூரு.
ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்தும் என்பதற்கான 3 காரணங்களை காண்போம்.
#1 விராட் கோலியின் அதிரடி ஆட்டத்திறன்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் விராட் கோலி. ஒவ்வொரு அணியிலும் விராட் கோலி போன்று பேட்ஸ்மேன்கள் இருந்தால் கண்டிப்பாக அந்த அணி அரை சதவீதம் வெற்றி பெற்றது போல்தான் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வளவு வலிமை வாய்ந்த பேட்ஸ்மேன் இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். ஆனால் 2019 ஐபிஎல் சீசனில் இதனை மாற்றி எழுதவார் என நம்பப்படுகிறது.
தொடக்க போட்டியில் விராட் கோலி எதிர்கொள்ளும் சென்னை அணியானது ஐபிஎல் தொடரில் பங்குபெறும் ஒவ்வொரு அணிகளையும் அச்சுறுத்தும் நோக்கில் செயல்படும். எம்.எஸ்.தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தொடக்கத்திலேயே விராட் கோலியை வீழத்த திட்டமிடுவார்கள். ஏனெனில் விராட் கோலி நன்றாக நின்று விளையாட ஆரம்பித்தால் வீழ்த்துவது மிகவும் கடினமாகும்.
எம்.எஸ்.தோனி ஒரு தந்திரமான கேப்டன். விராட் கோலி முழு ஆட்டத்திறனை வெளிபடுத்தினால் அனைத்து தந்திரங்களும் தகர்க்கப்படும். விராட் கோலி தனி ஒருவராக நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் வல்லவர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான முதல் போட்டியில் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
#2 ஆட்டத்ததை மாற்றியமைக்கும் திறன் கொண்ட ஷிம்ரான் ஹட்மயர்
ஷிம்ரன் ஹட்மயர் கடந்த சில வருடங்களாக தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இவரது ஆட்டத்திறனிற்கு சாட்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் கவுன்சில் 2018ன் டாப் 5 மூர்க்கத்தனமான நட்சத்திரங்கள் பட்டியலில் ஹட்மயர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஹட்மயரின் ஆட்டத்திறனை இந்தியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் இந்திய மண்ணில் இந்திய ரசிகர்களின் முன்னிலையிலேயே வெளிப்படுத்தி அசத்தினார்.
கயானாவைச் சேர்ந்த 22 வயதான இவர், 2019 ஐபிஎல் ஏலத்தில் 50 இலட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ஏலத்தில் இவரை வாங்க கடும் போட்டியிட்டனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதியாக 4.2 கோடி என்ற அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கியது.
இடதுகை பேட்ஸ்மேனான இவர், ஒருநாள் போட்டிகளில் 110 ஸ்ட்ரைக் ரேட்டுடன் திகழ்கிறார். அத்துடன் இவரது அதிரடி பேட்டிங் மிகவும் இயல்பான ஒன்றாகும். மிடில் ஆர்டரில் ரன்களை உயர்த்தும் திறைமை உடையவர் ஹட்மயர். பெரும்பாலும் மிடில் ஆர்டர் பேட்டிங்கே ஒரு அணியின் வெற்றியை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
#3 சேப்பாக்கம் மைதானம் சகாலின் சுழலுக்கு ஏற்றது
யுஜ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் இந்திய அணியின் சுழற்பந்து இரட்டையர்களாக திகழ்கின்றனர். உலகில் யுஜ்வேந்திர சகாலின் சுழற்பந்தை சமாளிக்ககூடிய பேட்ஸ்மேன்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். சகாலின் சுழற்பந்தே அபாயகரமாக இருக்கும், அத்துடன் ஆடுகளமும் அவருக்கு கூடுதல் சாதகமாக இருந்து வந்துள்ளது.
சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சகாலிற்கு சுழற்பந்து வீச்சிற்கு சற்று அதிகமாகவே சாதகமாக இருக்கும். 28 வயதுடைய இவரது சுழற்பந்து வீச்சு ஸ்ட்ராங் பேட்டிங் லைன்-அப்பை சிதைக்கும் வகையில் இருக்கும்.
இவரது கடந்த கால பந்துவீச்சை ஒப்பிடுகையில் தற்போது அதிகம் மேம்பட்டுள்ளதாக உள்ளது. பேட்ஸ்மேன்களின் மனநிலையை சரியாக கணித்து விளையாடுவதில் வல்லவராக திகழ்கிறார். அத்துடன் யுஜ்வேந்திர சகாலின் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களை அதிக நேரம் களத்தில் தங்கவிடாது.
யுஜ்வேந்திர சகால் சில மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தினால் கண்டிப்பாக தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ரன்களை குவிப்பது கடினம்.