2019 ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது 4வது முறையாக பட்டம் வென்றது, மும்பை இந்தியன்ஸ். எனவே, கடந்த ஐபிஎல் சீசன்களை போல இல்லாமல் சற்று மாறுதலாக நடப்பு ஐபிஎல் சீசன் முடிவடைந்தது. அவ்வாறு, சில கவனிக்கப்பட வேண்டிய சுவாரஸ்யமான மூன்று நிகழ்வுகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.தவறான நடுவர் முடிவுகள்:
நேற்றைய போட்டியிலும் கூட முதலாவது இன்னிங்சில் இறுதி ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் குறிப்பிடும்படி மிகவும் அகலமாக பந்து வீசப்பட்டது. இதனை நடுவர் கவனித்தும் அகல பந்தாக அறிவிக்கவில்லை. அதேபோல், இரண்டாவது இன்னிங்சில் தோனியை ரன் அவுட் செய்தது சர்ச்சைக்குள்ளானது. ரசிகர்கள் பலரும் இந்த முடிவு சரியானது அல்ல என்று காரசார விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், நடப்பு தொடரில் முதல் முறையாக பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி விளையாடியபோது ஆட்டத்தின் இறுதி ஓவரை மலிங்கா வீசினார். ஆட்டத்தின் இறுதி பந்தை நோபால் ஆக வீசி அதிர்ச்சியளித்தார். இறுதியில் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், கடைசி பந்தை கவனிக்கத்தவறிய நடுவரை கடுமையாக சாடினார், பெங்களூர் கேப்டன் விராட் கோலி. இதேபோல், சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இறுதி ஓவரை வீசினார். கடைசி 4 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், திடீரென ஒரு நோபால் வீசப்பட்டது. கள நடுவர்கள் இருவரும் இதனை கவனிக்க தவறினர். இதனால் மிகவும் கோபம் அடைந்த கேப்டன் கூல் தோனி மைதானத்துக்குள் நுழைந்து நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மிகவும் பேசும் பொருளாக நடப்பு தொடரில் அமைந்தது. இறுதியில் கடைசி பந்தில் ஆல்ரவுண்டர் சேன்ட்னர் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.
#2.டெல்லி அணியின் எழுச்சி:
"டெல்லி கேப்பிடல்ஸ்" என பெயர் மாற்றம் செய்த பிறகு, இதுவரை இல்லாத தொடர்களை போல நடப்பு தொடர் மிகச் சிறப்பாக இந்த அணிக்கு அமைந்தது. புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சவுரவ் கங்குலி, ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து இளம் படையை சிறப்பாக வழிநடத்தினார். இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தம்மால் முடிந்த பங்களிப்பினை தொடர் முழுவதும் அளித்தார். இதன் மூலம், 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது, டெல்லி அணி. அணியில் இடம்பெற்ற பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் போன்றோரும் பந்துவீச்சில் ரபாடா, இசாந்த் சர்மா, அமித் மிஸ்ரா போன்றோரும் மிக அருமையாக செயல்பட்டனர். தங்களது முதலாவது ஐபிஎல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் 2வது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும், இனி வரும் காலங்களில் தான் செய்த தவறை உணர்ந்து இந்த அணி இறுதி போட்டிக்கு நுழைந்து நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3.மண்கட் முறையில் ரன் அவுட் செய்த அஸ்வின்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ஓவரில் அவரே மண்கட் முறையில் நான் ஸ்டிரைக்கில் நின்ற ஜோஸ் பட்லரரை ஆட்டமிழக்கச் செய்தார். இது நடப்பு தொடரில் நடைபெற்ற ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளிலேயே எதிர்பார்த்திராத நிகழ்வாக இது அமைந்தது. போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்து இருந்தது. பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்த போது 43 பந்துகளில் 77 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் இருந்தனர். அஸ்வின் ரன் அவுட் செய்தபோது பட்லர் 43 பந்துகளில் 69 ரன்களைக் குவித்திருந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு வேளை இவர் ரன் அவுட் ஆகாமல் இருந்தால், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கும்.