2019 உலகக்கோப்பை அனைத்து சர்வதேச அணிகளுக்கும் ஒரு மிகப்பெரிய இலக்காகும். இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணியின் உலகக்கோப்பை வேட்கை தணிக்க போராடுமா, மூத்த வீரர்களின் உதவியோடு உலகக்கோப்பை மீண்டும் தன்வசம் செய்ய ஆஸ்திரேலிய அணி போராடுமா, தற்பொழுது சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ள இந்திய அணி தன்வசம் உலகக்கோப்பையை கைபற்ற போராடுமா, திடீரென உணர்ச்சி பொங்க விளையாடும் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை கைப்பற்றுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு லீக் சுற்றிலும் ஆட்டத்தின் ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது.
ஆனால் இந்த உலகக்கோப்பை ஆரவாரத்திற்கு முன்னால் மற்றொரு பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் கூடிய ஐபிஎல் திருவிழா இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. ஐபிஎல்லை தொடர்ந்து உலகக் கோப்பை வருவதால் அனைத்து கிரிக்கெட் நாடுகளும் தங்களது உலகக் கோப்பை அணியில் உள்ள வீரர்களை இந்தாண்டு ஐபிஎல் சீசனில் விளையாட நிறுத்தி வைக்க பார்க்கும். அப்படியே "என்.ஓ.சி" வழங்கி ஐபிஎல் விளையாட அனுமதித்தாலும் பாதியில் தங்கள் நாட்டிற்கு திரும்பும்படியான நிபந்தனையுடனே அவர்களை ஐபிஎல் விளையாட அனுமதிக்கும்.
உலகின் டாப் வெளிநாட்டு வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அனுமதி அளிக்காது.எனவே ஐ.பி.எல்.-ல் அறிமுகமில்லாத, ஜொலிக்கக் கூடிய சில வீரர்களை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகள் திட்டமிடுகிறார்கள்.
உலகின் பல நாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் நன்றாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் நிறைய சிறப்பான வீரர்கள் உள்ளனர். உலகின் அனைத்து டி20 லீக்கின் தலைவராக ஐபிஎல் கருதப்படுகிறது. ஐபிஎல் லீக்கில் அனைத்து நாட்டு வீரர்களும் விரும்பி ஏலத்தில் பங்கேற்பர். ஏனெனில் உலகின் தலைசிறந்த அனைத்து வீரர்களும் இந்த டி20 லீக்கில் பங்குபெறுவதால் இளம்வீரர்களுக்கு ஐபிஎல் லீக் ஒரு அனுபவ வீரர்களின் ஆலோசனை பெற ஒரு நல்ல வழித்தடமாக உள்ளது.
ஐபிஎல் அணிகள் வீரர்களின் ஆட்டத்திறனில் மிகுந்த கவனம் செலுத்துகிறது.முதலில் அளிக்கப்படும் வாய்ப்பை யார் சரியாக பயன்படுத்தி தனது முழு ஆட்டத்திறனையும் சீராக அனைத்து போட்டிகளிலும் வெளிபடுத்துகிறார்களோ அவர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக் கொள்கிறது. உலகக்கோப்பையினால் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்காத சூழ்நிலையில் இளம் நட்சத்திர வீரர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. உலகின் தலைசிறந்த வீரர்களும் இப்படித்தான் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டு தற்போது டாப் வீரர்களாக உள்ளனர்.
#1.அலி கான் ( அமெரிக்கா)
பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இளம் வேகப்பந்து வீச்சாளர் அலிகானிற்கு இந்த வருடம் சிறப்பாக அமைந்தது. இவர் இந்த வருடத்தில் நடைபெற்ற கனடா குளோபல் டி20 தொடரிலும், சி.பி.எல் தொடரிலும் பங்கேற்றார். 2017 ஆம் அண்டின் சிபிஎல் சீசனில் "கயானா அமேசான் வாரியர்ஸ் " அணியில் விளையாடினார். பின் 2018ல் சி.பி.எல் தொடரில் உடற்தகுதியை கருத்தில் கொண்டு வெளியேற்றப்பட்டார்.
எனினும் இவ்வருட சிபிஎல் சேம்பியன் "டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ்" அணியில் பங்கேற்று அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். டேவிட் வார்னர், பிராவோ போன்றோரின் ஆலோசனையின் பேரில் சிறப்பாக செயல்பட்டார். அணியின் கேப்டன் பிராவோ ரோன்ஸ் ஃபோர்ட் பிட்டனிற்கு பதிலாக இவரை தேர்ந்தெடுத்து சிறப்பாக டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியில் விளையாட வைத்து அசத்தினார். 8 போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்டுகளை சிபிஎல் சீசனில் வீழ்த்தியுள்ளார். இவருடைய பந்து வீச்சு பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் என்பதால் இந்த ஐபிஎல் சீசன் ஏலத்தில் ஐபிஎல் அணிகள் இவரை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.ராசி வென் டேர் துஸன்( தென்னாப்பிரிக்கா)
29 வயது தென்னாப்பிரிக்க வீரர் ராசி வென் டேர் துஸன் உள்ளுர் போட்டிகளில் தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய ஆட்டத்திறன் ராம்ஸ்லாமில் சிறப்பாக இருந்தாலும் "கனடா குளோபல் டி20 " தொடரில் தான் உலகறியச் செய்தது.
இவர் கனடா குளோபல் டி20 தொடரில் "வென்கோவர் நைட்ஸ் " என்ற அணியில் முக்கிய வீரராக பங்கேற்று அந்த அணி சேம்பியன் ஆக உறுதுணையாக இருந்தார். இவர் சி.பி.எல் தொடரில் "ஸ்டே கிட்டாஸ் மற்றும் நெவிஸ் பேட்ரோடிஸ் " அணியில் விளையாடினார்.
இந்த இரு டி20 லீக் தொடர்களிலும் சிறப்பாக விளையாடியதால் தென்னாப்பிரிக்கா அணியின் தேர்வாளர்கள் அவரை ஜிம்பாப்வே தொடரில் சர்வதேச அணியில் தேர்வு செய்தது. அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக போட்டியிலேயே தனது அரை சதத்தை விளாசினார்.இறுதியில் அந்த தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெயரையும் பெற்றார். 2வது டி20 தொடரில் தொடக்க ஆட்டக்காரராக டிகாக்குடன் களமிறங்கும் வாய்ப்பினையும் பெற்றார்.
இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த "தென்னாப்பிரிக்கா ஏ " அணியில் இடம்பெற்று நல்ல ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார். எனவே இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்க வாய்ப்புள்ளது.
#3.குயிஸ் அகமது(ஆப்கானிஸ்தான்)
சுவிட்சர்லாந்து என்றால் "சாக்லேட்" ஞாபகம் வரும், ஆப்கானிஸ்தான் என்றால் "சுழற்பந்து வீச்சாளர்"தான் ஞாபகம் வரும்.ரஷிட் கான்,முஜிப் யவர் ரகுமான்,முகமது நபி ஆகிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உலகெங்கும் நடைபெற்று வரும் டி20 லீக்கில் பங்கேற்று வருகின்றனர்.
18 வயது சுழற்பந்து பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராகிவிட்டார். தற்பொழுது நடைபெற்ற சில டி20 தொடர்களில் இவருடைய ஆட்டத்திறன் "ரஷித் கான்,முஜிப் ரகுமான்" போன்று சிறப்பாக உள்ளது. நேபால் வீரர் "சந்தீப் லாமிச்சே " கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியில் எடுக்கப்பட்டு சிறப்பாக பந்து வீசினார். இதனால் லாமிச்சேவிற்கு "மான்ட்ரல் டைகர்ஸ்,ஸ்டே கிட்டாஸ்,நாங்கர்பூர் லியோபர்ட்ஸ்" போன்ற அணிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
குயிஸ் அகமது 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் தொடரில் தனது நாட்டிற்காக சிறப்பாக விளையாடியுள்ளார்.இவருடைய அறிமுகமின்மையால் இவரை நிறைய டி20 போட்டிகளில் கண்டுகொள்ள படுவதில்லை.கடந்த சிபிஎல் சீசனில் "ஸ்டே லுசியா " அணியில் விளையாடினார்.ஆப்கானிஸ்தான் பிரிமியர் தொடரின் இறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.