இதுவரை ஐபிஎல் 11 சீசன்கள் முடிந்துள்ளன. இதில் 8 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்குபெற்றுள்ளது. விளையாடிய 8 சீசனிலும் பிலே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. ஐபிஎல் இல் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது போல் வேறு எந்த அணியும் செய்ததில்லை. மும்பை மற்றும் சென்னை அணி இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2 வருட தடைக்கு பிறகு மீண்டும் சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை, ஹைதெராபாத் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் சென்னை அணிக்கு ரசிகர்கள் உலகம் முழுவதும் அதிகம். இதற்கு சாட்சியாக சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்திற்கு வந்த ரசிகர்களின் வருகை உள்ளது.
சென்ற ஆண்டு ராயுடு, பிராவோ மற்றும் வாட்சன் ஆகிய மூத்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் இந்த முறை சில இளம் தலைமுறையினரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியை போல் 2008ம் ஆண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த அணி சென்னை. இந்த இருவரும் தான் அப்போது இறுதி போட்டியிலும் மோதினர். சென்னை அணியை பொறுத்தவரையில் இவ்வருடமும் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை தாண்டியவர்கள். இருப்பினும் வில்லி, பில்லிங்ஸ், சாண்ட்னெர் என்று சில இளம் வீரர்களும் உள்ளனர். அவ்வாறு சென்னை அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய 3 இளம் வீரர்களை பற்றிய தொகுப்பை காணலாம்.
#3 துருவ் ஷோரே
2015-16ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் தொடங்கிய இவரது சிறப்பான ஆட்டம், இன்று முதல் தொடர்ந்து கொண்டே வருகிறது. டெல்லி மாநிலத்தை சேர்ந்த துருவ் ஷோரே, ஒரு சிறந்த துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். இதுவரை முதல் தர போட்டியில் 1873 ரன்களை குவித்துள்ள துருவ் ஷோரே சராசரியாக 52.02 வைத்துள்ளார். இவரது நிலையான ஆட்டம் நிச்சயம் சென்னை அணிக்கு கைகொடுக்கும். 27 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 605 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 அரை சதமும் அடங்கும். சமீபத்தில் நடந்த முஸ்தாக் அலி கோப்பையில் 62* ரன்கள் எடுத்ததுடன், இறுதி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி தேடி தந்தார்.
#2 மோனு குமார்
ராஞ்சியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், இதுவரை லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே பங்குபெற்றுள்ளார். 2014 ஆண்டு அறிமுகமான இவர், இன்னும் முதல் தர போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். 16 உள்ளூர் டி20 போட்டிகளில் பங்குபெற்றுள்ள மோனு குமார், 19 விக்கெட்களை சாய்த்துள்ளார். 2017-18ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 நேஷனல் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்தாக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியதால், சென்னை அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரின் துல்லியமான வேகப்பந்து வீச்சு, மொஹாலி மற்றும் வான்கடே மைந்தனங்களில் கைகொடுக்கும்.
#1 லுங்கி ங்கிடி
இந்திய அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிய லுங்கி ங்கிடி, முதல் போட்டியிலேயே 5 விக்கெட் எடுத்து அசத்தினார். தற்போதைய தென்னாபிரிக்கா அணியின் முன்னணி பந்துவீச்சாளராக வளம் வரும் இவர், சென்னை அணியால் சென்ற ஆண்டே ஏலம் எடுக்கப்பட்டார். 7 போட்டிகளில் விளையாடிய லுங்கி ங்கிடி, 19 விக்கெட்களை எடுத்தார். இதுவரை 50 டி20 போட்டிகளில் 59 விக்கெட்களை சாய்த்துள்ளார். இவரது சிறப்பான பந்து வீச்சு பஞ்சாப் அணிக்கு எதிராக அமைந்தது. அப்போட்டியில் 10 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்களை சாய்த்தார். தோனி இவரை பவர் பிலே மற்றும் இறுதி ஓவர் வீச பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.