ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரையில் சீசன் 1-ல் இருந்தே பெரிதும் நம்புவது இளம் தலைமுறையினரை தான். கோப்பை வென்ற முதல் சீசனில் பெரும்பாலும் புது முகங்கள் மற்றும் இளைஞர்களே அணியில் இருந்தனர். இந்த சீசனில் அது கண்டிப்பாக தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. ராகுல் திரிபாதி, ரியான் பராக், மனன் வோஹ்ரா மற்றும் ஓஷனே தாமஸ் ஆகியோர் இவ்வருடம் அணியில் இடம் பிடித்துள்ளனர். நாம் இப்பதிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்காக உதவக்கூடிய 3 இளைஞர்களை பற்றிய தொகுப்பை காண இருக்கிறோம்.
#3 கிருஷ்ணப்பா கெளதம்
கடந்த சீசனில் ஒரே ஆளாய் போராடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சில போட்டிகளில் வெற்றி தேடி தந்தவர் கெளதம். பெங்களூரு மாநிலத்தை சேர்ந்த கெளதம், கர்நாடக அணிக்காக முஸ்தாக் அலி கோப்பை மற்றும் ரஞ்சி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். சிறந்த ஆல் ரவுண்டரான கெளதம், பவர் பிளேவிலும் பந்து வீசும் திறமை பெற்றவர். ரன்களை கட்டுப்படுத்துவதோடு முக்கிய கட்டத்தில் எதிரணியின் விக்கெட்டை எடுப்பதும் இவரது கூடுதல் பலம். சென்ற ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பினிஷெராக விளையாடி கடைசி நேரத்தில் இலக்கை சேஸ் செய்ய மற்றும் அணியின் ஸ்கோரை உயர்த்திட மிகவும் உதவியவர்.
சென்ற ஆண்டு இவரது ஸ்ட்ரைக் ரேட் 196.87, இதுவே கடந்த சீசனின் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் ஆகும். இதில் இருந்தே இவரின் அபார திறமை அனைவருக்கும் புரிந்திருக்கும். இந்த ஆண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் இவரிடம் இருந்து சென்ற ஆண்டை போலவே சிறப்பாக ஆடுமாறு கூடுதல் ஆலோசனை வழங்கி இருக்கும். இவருடன் சேர்ந்து ஷ்ரேயஸ் கோபால் மிடில் ஓவர் பந்துவீசும் போது எதிரணியின் ரன் ரேட் கணிசமாக குறையும். 2019 ஐபிஎல் போட்டிகளில் கெளதம் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு ஒருநாள் இவர் கதவை தட்டும்.
#2 சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன், கடந்த 3 முதல் 4 வருடங்களாக அனைவருக்கும் அதிகம் பரிட்சயமான பெயர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாம்சன், எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதில்லை. இவரது திறமையான ஆட்டத்தின் மூலம், அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். சிறந்த நேரத்தில் பந்தை குறிப்பார்த்து சிக்ஸருக்கு அடிப்பதில் மிகவும் வல்லவர். கேரளா மாநிலத்தை சேந்த சாம்சன், கேரளா அணிக்காக ரஞ்சி போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். இவரது திறமையின் காரணமாக இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆனால் போதிய ரன்கள் அடிக்க தவறியதால் தொடர்ந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். ஆனால் இன்னும் வயது இருப்பதால் அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார். தற்போது இந்திய ஏ அணிக்காக ஆடி வரும் சாம்சன், விக்கெட்கீப்பராகவும் நன்றாக செயல்படுகிறார். வரும் ஐபிஎல் தொடர் தான் இவரது திருமணத்திற்கு பிறகு விளையாடும் முதல் தொடர். மனைவியின் அதிர்ஷ்டம் கைகொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
#1 ஆஷ்டன் டர்னர்
நிறைய இந்திய ரசிகர்களுக்கு ஐபிஎல் 2019 ஏலத்திற்கு முன்பு இவரின் பெயர் பரிட்சயம் கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை போராடி ஏலத்தில் எடுத்தது. இதற்கு முக்கிய காரணம் இவரின் பிக் பாஷ் லீக்கின் சிறப்பான ஆட்டங்கள். அதை சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடர் மூலம் நிரூபித்தார். கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா அணியை தனது அதிரடி ஆட்டம் மூலம் வெற்றி பெறச் செய்தார். இதே ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் இவர் விளையாடினால் ஆச்சரியம் இல்லை. டர்னரின் கூடுதல் அம்சம் இவர் ஒரு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர். எனவே மிடில் ஓவர்களில் ஒன்று இரண்டு ஓவர்கள் வீச உதவுவார்.