ஐபிஎல் 2019: பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய மூன்று இளம் வீரர்கள்

ஷிம்ரோன் ஹெட்மயேர்
ஷிம்ரோன் ஹெட்மயேர்

8 அணிகள் பங்குபெறும் 12வது ஐபிஎல் தொடர் சென்னையில் 23ம் தேதி அன்று தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. சென்னை, மும்பை அணிக்கு அடுத்து பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் அதிகம் என சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணம், அந்த அணியில் இடம் பிடித்திருக்கும் ஜாம்பவான்கள். கெயில், கோஹ்லி, டீவில்லியர்ஸ், வாட்சன், யுவராஜ் என பல சர்வதேச முன்னணி வீரர்கள் இந்த அணியில் விளையாடி இருந்தாலும், இன்னும் கோப்பை வெல்ல முடியவில்லை என்பது பல ரசிகர்களுக்கு வருத்தமே.

2009,2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இறுதி போட்டி வரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தனர். தற்போது ஹெட்மயேர், ஸ்டோய்னிஸ் ஆகியோரின் வருகையால் மேலும் வலுவடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய 3 இளம் வீரர்கள் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.

#3 சிவம் துபே

சிவம் துபே
சிவம் துபே

மும்பையைச் சேர்ந்த 25 வயதான சிவம் துபே தற்போது வளர்ந்து வரும் உள்ளூர் நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இமாலய சிக்ஸர் அடிப்பது மட்டும் இல்லாமல், நல்ல வேகம் வீசக் கூடிய பந்து வீச்சாளராகவும் உள்ளார். அனுபவ சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் தம்பே பந்துவீச்சில் தெடர்ந்து 5 சிக்ஸர் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதே போல் ரஞ்சி போட்டியில் பரோடா அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்து 5 சிக்ஸர் அடித்து அசத்தினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், இது நடந்தது ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னால். நல்ல இந்திய ஆல் ரவுண்டர் இல்லாமல் தவித்து வந்த பெங்களூரு அணியின் இடத்தை சிவம் துபே நிரப்புவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

#2 நவதீப் சைனி

நவதீப் சைனி
நவதீப் சைனி

டெல்லியை சேர்ந்த 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் சைனி. இவரது சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி 2017-18 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதி போட்டி வரை சென்றது. அதே வருடம் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தியதால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போதைய இந்திய ஏ அணியின் முழு நேர பந்துவீச்சாளராக உள்ள சைனி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இவரின் சிறப்பம்சம் பந்தை இன்ஸ்விங் செய்து ஸ்டம்ப்பை தாக்குவது. சென்ற வருடம் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இவ்வருடம் இவருக்கான வாய்ப்பு கண்டிப்பாக காத்திருக்கிறது என நம்பலாம்.

#1 ஷிம்ரோன் ஹெட்மயேர்

ஷிம்ரோன் ஹெட்மயேர்
ஷிம்ரோன் ஹெட்மயேர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அடுத்த கிறிஸ் கெயில் என்று உள்ளூர் மக்களால் பேசப் படுபவர். 19 வயத்திற்குற்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக இருந்து அணிக்கு கோப்பை பெற்று தந்தார். வெறும் 24 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ள ஷிம்ரோன் ஹெட்மயேர், ஏற்கனவே 4 சதங்கள் விளாசிவிட்டார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனியாளாய் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தவர். அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரோன் ஹெட்மயேர், கெயில் விட்டுச்சென்ற பெங்களூரு அணிக்கான இடத்தை பிடிப்பார் என பரவலாக பேசப்படுகிறது. 22வயதான ஹெட்மயேர் பெங்களூரு அணிக்காக 5வது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

Quick Links

App download animated image Get the free App now