2019 ஐபிஎல் திருவிழா திரில்லாகவும் பொழுதுபோக்கு அளிக்கக் கூடியதாகவும் திருப்திகரமாகவும் முடிவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியுற்றது. இருப்பினும், சென்னை அணியின் முயற்சியும் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. ஏனெனில், இந்த அணியில் விளையாடிய பல வீரர்களும் 30 வயதை கடந்தவர்கள் ஆவர். அப்படிப்பட்ட அதிக வயதை கடந்த போதிலும் அதற்கு அப்பாற்பட்டு விளையாடிய 4 சிறந்த சென்னை அணியின் வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். தோ
#1.தோனி - 37 வயது
இந்த தொகுப்பில் முன்னிலை வகிப்பவர், கேப்டன் தோனி. இவர் ஆண்டுக்கு ஆண்டு தம்மை மெருகேற்றி வருகிறார். முக்கியமான நான்காம் இடத்தில் பேட்டிங்கில் களமிறங்கும் இவர், 15 போட்டிகளில் விளையாடி 416 ரன்களை குவித்தார். மேலும், இந்த தொடரில் சென்னை அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரரும் இவரே. காயம் மற்றும் உடல்நிலை காரணமாக தொடரில் இரு போட்டிகளில் இவர் விளையாடாவிட்டாலும் அணிக்கு முக்கியமான தருணங்களில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார். மேலும், இறுதிப்போட்டிவரை சென்னை அணியை தனது தலைமையின் கீழ் வழி நடத்திச் சென்றார்.
#2.இம்ரான் தாஹிர் - 40 வயது
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளவர் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர், இம்ரான் தாஹிர். இவர் 40 வயதை கடந்த போதிலும் இருபது வயது இளைஞனைப் போலவே துடிப்போடு களத்தில் விளையாடுகிறார். ஒவ்வொரு முறையும் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு, இவர் கொண்டாடும் செயல்பாடுகள் ரசிகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், இவர் தொடரின் அதிக விக்கெட்களை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை தன் வசம் ஆக்கினார். 17 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் மிக அதிக வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த உலக கோப்பை தொடரில் இவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
#3.ஹர்பஜன் சிங் - 38 வயது
மேற்குறிப்பிட்ட இரு வீரர்களுக்கு அடுத்து மூன்றாம் இடம் வகிப்பவர், இந்திய வீரர் ஹர்பஜன் சிங். இவர் 38 வயதை கடந்த போதிலும் சிறப்பாக பந்து வீசி எதிரணியின் விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் அதிகபட்ச விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். கடந்த இரண்டு வருடங்களில் ஒப்பிடும் போதிலும் இந்த சீசனில் அதிகபட்ச விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இந்த சீசனில் 11 போட்டியில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், இவரது பவுலிங் எக்கானமி 7க்கு மிகாமல் உள்ளது. குறைந்தது இரு ஓவர்களையாவது பவர் பிளே நேரங்களில் வீசி விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பாடுபட்டார்.
#4.ஷேன் வாட்சன் - 37 வயது
முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், சென்னை அணியில் நிரந்தர தொடக்க வீரராக தொடர் முழுவதுமே களமிறங்கினார். சில நேரங்களில் பந்துவீசும் இவர் நடப்பு தொடரில் ஒருவரைக்கூட பந்துவீச அணி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. மாறாக, இவரை பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பளித்தது. தொடரின் முற்பாதியில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையின் பேரில், ப்ளே ஆஃப் சுற்றுகளில் பார்முக்கு திரும்பினார். தொடர்ச்சியாக டெல்லி மற்றும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டங்களில் அரைசதத்தை கடந்தார். இவர் விளையாடிய 17 போட்டிகளில் மூன்று அரைசதங்கள் உட்பட 396 ரன்களை குவித்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தமது முட்டி காலில் ஏற்பட்ட காயத்தை சற்றும் ஒரு பொருட்டாக மதிக்காமல் 80 ரன்களை குவித்து அணிக்கு பாட்டுபட்டதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.