இந்தியன் பிரீமியர் லீக் தொடர் உலகின் மிக பிரபலமான டி20 தொடராக பார்க்கப்படுகிறது. இந்த டி20 தொடரில்தான் உலகின் தலைசிறந்த டி20 சூப்பர் ஸ்டார்களை அதிகம் காணலாம். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த தொடரில் வீரர்கள் இடம்பிடிக்க கடும் தவமிருப்பர். அத்துடன் இளம் இந்திய வீரர்கள் சர்வதேச அணியில் இடம்பிடிக்க ஒரு வழித்தடமாக ஐபிஎல் தொடர் அமைகிறது.
ஹர்திக் பாண்டியா, ஜாஸ்பிரிட் பூம்ரா, ஷிரேயாஸ் ஐயர் போன்றோர் ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்துதான் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்தனர். நாம் இந்த கட்டுரையில் தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள 5 இளம் வீரர்கள் பற்றி காண்போம். இந்த வீரர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுரைக்கு செல்லும் முன் 2019 ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சில இளம் வீரர்களின் பட்டியலை காண்போம்: அன்குஸ் பெய்ன்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்), ஷஷன்க் சிங் (ராஜஸ்தான் ராயல்ஸ்), பிரித்வி ராஜ் யாரா (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்), ரூத்ராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்), பிரயாஸ் ரே பார்மன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), அனமோல்பிரிட் சிங் (மும்பை இந்தியன்ஸ்)
நாம் இங்கு தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள 5 இளம் வீரர்களை பற்றி காண்போம்:
#5 தேவ்தத் படிக்கல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
தேவ்தத் படிக்கல் பெங்களூரு அணியில் அடிப்படை விலையான 20 இலட்சத்திற்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் 2018 கர்நாடக பிரிமியர் லீக் தொடரில் பெலேரி டஸ்கர் அணிக்காக 4 போட்டிகளில் களமிறங்கி 124 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காக சில போட்டிகளில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கேரளாவில் பிறந்த இவர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 18 வயதுடைய இளம் பேட்ஸ்மேனான இவர் பேட்டிங்கில் அதிக நம்பிக்கையுடன் விளையாடுவார். இந்த இளம் வீரர் வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆவார்.
படிக்கல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க பேட்ஸ்மேனான இவர் இந்த ஐபிஎல் தொடரில் தன்னை நிருபிப்பார் எனத் தெரிகிறது.
#4 ஹர்பிரிட் பிரார் (கிங்ஸ் XI பஞ்சாப்)
ஹர்பிரிட் பிரார் அடிப்படை விலையான 20 இலட்சத்திற்கு கிங்ஸ் XI பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். மோகாவில் பிறந்த ஆல்-ரவுண்டரான இவர் இளம் பஞ்சாப் அணியில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
23வயதான இவரின் சிறப்பான ஆட்டம் மற்றும் நுண்ணிய பந்துவீச்சே ஐபிஎல் தொடரில் இவர் விளையாட காரணமாக இருந்தது. தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கிரிக்கெட்டில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால் கனடாவில் தனது சகோதரியுடன் சென்று ஏதேனும் வேலைக்கு சேரலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால் தக்கசமயத்தில் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மொகாலி மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் பந்து வீச்சு கணிக்க முடியாத வகையிலும், அதிகமாக சுழன்று திசை மாறும் வகையிலும் இருக்கும். அத்துடன் இந்த இளம் வீரர் நீண்ட சிக்ஸர்களை விளாசும் திறமை படைத்துள்ளார்.
சிறந்த வீரரான இவர் உள்ளுர் கிரிக்கெட்டில் 7 வருடங்களாக பங்கேற்று கடைசியாக பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் 2019ல் பங்கேற்க உள்ளார். இவருக்கு வாயப்பளித்தால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.