இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டவரான தோனியை அடையாளமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவரால் தான் ஐபிஎல் தொடரே இந்தியாவிற்கு வர காரணம் என்றும் சொல்லலாம். இவரது தலைமையில் T20 உலக கோப்பையை இந்திய அணி வென்று சாதித்த அந்த தருணத்தில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவின்பேரால் உருவாக்கப்பட்டது இந்த ஐபிஎல் எனலாம். இந்தியா கிரிக்கெட்டிற்க்காக சாதித்த தோனி, சென்னை அணிக்காக ஒரு படி மேலே போய் சாதித்துள்ளார் எனலாம். சென்னை அணி, தான் பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது மட்டுமின்றி ஏழு முறை பைனலுக்கு முன்னேறி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது.
சிறிய இரண்டாண்டு தடைக்கு பின் திரும்பிய CSK அணிக்கு கடந்த சீசன் உணர்வுபூர்வமாக அமைந்தது. இதில் பலரின் விமர்சனங்களை பொய்யாக்கும் விதத்தில் அணியை மீண்டும் கோப்பையை வெல்ல வைத்தார் தோனி. இந்த முறை ஏலத்தில் வேகப்பந்துவீச்சை மெருகேற்றும் நோக்கில் பங்குகொண்டது அதில் முன்னாள் CSK வீரரான மோஹித் சர்மாவை மீண்டும் வாங்கியது.
அணியின் விபரம்:
பேட்ஸ்மேன்கள்:
சுரேஷ் ரெய்னா, பாப் டூப்ளஸிஸ், எம்.விஜய், அம்பட்டி ராயுடு, துருவ் சோரே.
விக்கெட் கீப்பர்கள்:
எம்.எஸ்.தோனி, ஜெகதீஷன், சாம் பில்லிங்ஸ்.
ஆல்ரவுண்டர்கள்:
ரவீந்திர ஜடேஜா, டேவிட் வில்லி, டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், சி.பிஷ்னாய், மிட்சேல் சாண்ட்னர்.
பௌலர்கள்:
இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், மோஹித் சர்மா, கரண் சர்மா, தீபக் சஹார், கேஎம்.ஆசிப், மோனு குமார், ஷார்துல் தாகூர்,
லுங்கி ங்கிடி [ காயம் காரணமாக தற்போது அவர் விலகியுள்ளார் ]
அணியின் கலவை:
இந்த அணியின் வீரர்கள் பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை. அனுபவ வீரர்கள் நிறைந்து காணப்படும் ஒரு நிலையான அணி. நெருக்கடியான சூழ்நிலையில் தனி ஒருவராக வெற்றி தேடி தருவதில் தனி ஒரு வீரரும் வல்லவர்கள். இதை நம்மால் கடந்த சீசனில் பார்க்கமுடிந்தது. குறிப்பாக அணியில் சுழற்பந்துவீச்சுக்கு பஞ்சமில்லை என்பதால் அதை எப்படி தோனி கையாளப்போகிறார் என்பது தனி சிறப்பு. காரணம் சென்னை சேப்பாக் ஆடுகளம் சுழற்பந்துவீசிச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதாகும்.
துவக்க வீரர்கள்:[1,2]
ஷேன் வாட்சன், பாப் டூப்ளஸிஸ்/எம்.விஜய்/அம்பத்தி ராயுடு.
பலம்: துவக்க வீரராக வாட்சன் களமிறங்குவது உறுதி. டூப்ளஸிஸ் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி வருவதால் அம்பத்தி ராயுடு அல்லது விஜய் களமிறங்கலாம். வாட்சன், ராயுடு ஜோடி மிகவும் அபாயகரமான ஜோடி எனலாம். கடந்த சீசனில் அசத்தலாக ரன்களை குவித்து தள்ளியது இந்த இணை.
பலவீனம்: எம்.விஜயின் பார்மை பலவீனம் என்று சொல்லலாம். அவரை களமிறக்கபடுவது கொஞ்சம் கேள்விக்குறியான் விஷயம் தான்.
அதுமட்டுமில்லாமல் ராயுடு சமீபகாலமாக ஒருநாள் தொடர்களில் சொதப்பி வருகிறார், அவர் இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தி கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் டூப்ளசிஸ் தேசிய அணிக்காக விளையாட தாயகம் திரும்பினால் ஒரு அனுபவ வீரரை இழக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
துவக்க வீரர்கள் மதிப்பெண் : 8/10
மிடில் வரிசை வீரர்கள்:[3,4,5]
சுரேஷ் ரெய்னா, தோனி, கேதார் ஜாதவ் மற்றும் சிலமுறை அம்பத்தி ராயுடு
பலம்: CSK அணியின் பலமாக இருப்பது மிடில் வரிசை பேட்டிங் தான். இங்கு தான் CSKவின் தூண்களான ரெய்னா மற்றும் தோனி களமிறங்கவுள்ளனர். அணியின் போக்கை கவனித்து ஆடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். மேலும் ராயுடு துவக்க வீரராக களமிறங்காத போது 4வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும் ஜாதவ் நடுவரிசையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர்.
பலவீனம்: ஒரு சிறிய பலவீனமாக பார்க்கப்படுவது நடுநிலை ஓவர்களில் அணியின் ஸ்ட்ரைக் ரேட் குறைய வாய்ப்புள்ளது. இவர்களில் ரெய்னா மட்டுமே பெரிய ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட் ஆடக்கூடியவர். மீதி மூவரும் நேர்த்தியான ஆட்டக்காரர்கள். அதனால் நடுவில் ரன்ரேட் குறைய வாய்ப்புள்ளது.
நடுநிலை வீரர்கள் மதிப்பெண்: 9/10.
பினிஷெர்கள்:[6,7]
பிராவோ, ஜடேஜா; [ சிலமுறை ஜாதவ் மற்றும் பில்லிங்ஸ் இங்கு களமிறங்கலாம் ].
பலம்: பிராவோ திறமையான அதிரடி ஆட்டக்காரர், டுப்ளசிஸ் அணியில் இல்லாத பொழுது சாம் பில்லிங்ஸ் ஆட்டத்தை பினிஷிங் செய்யலாம். அவரும் இந்த இடத்திற்கு பொருத்தமானவர். கேதார் ஜாதவ் சிலமுறை இந்த வாய்ப்பு கிட்டும் பட்சத்தில் சரியான முறையில் ஆட்டத்தை நிறைவு செய்வார்.
பலவீனம்: ஜடேஜா இந்த இடத்திற்கு பலவீனமாக காட்சியளிக்கிறார். காரணம் அவர் மிகப்பெரிய ஷாட்கள் ஆடுவதில்லை. இந்த இடத்தில் அவர் திணறுவதை நாமும் பலமுறை பார்த்ததுண்டு.
பினிஷெர்கள் மதிப்பெண்: 8/10
பௌலர்கள்:[8,9,10,11]
ஹர்பஜன் சிங்/கரண் சர்மா, இம்ரான் தாஹிர்/சான்டனர், டேவிட் வில்லி/மோஹித் சர்மா, தீபக் சஹார்.
பலம்: அணியில் பல சுழற்பந்துவீச்சளர்கள் இருப்பது மிகப்பெரிய பலம். சென்னை ஆடுகளம் அதற்க்கு நன்கு ஒத்துழைக்கும். தீபக் சஹர் பவர்-பிளே ஓவர்களில் சிறந்து விளங்குவார். மோஹித் சர்மா ஸ்லோ பால் போடுவதில் வல்லவர் இதனால் கடைசி கட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.
பலவீனம்: எது பலமோ அதுவே பலவீனம் எனலாம் நிறைய சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அணியில் வாய்ப்பு பெறுவது கடினமாகிறது. இதனால் அவர்கள் தனது பார்மை தொடர்ந்து தக்க வைப்பது கடினமாகிறது.
லுங்கி ங்கிடி மற்றும் சார்துல் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், இது பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. சார்துல் தாகூர் கூட நடுவில் இணைய வாய்ப்புள்ளது ஆனால் ங்கிடிக்கு பதிலாக வேறொருவரை கட்டாயம் எடுக்கவேண்டிய சூழலில் உள்ளது CSK அணி.
மேலும் மிகப் பெரிய பலவீனம் டெத் ஒவர்கள் எனலாம். கடந்த சீசனில் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்த பட்டியலில் சென்னை முதலிடம் வகிக்கிதது. இதற்கு முக்கிய காரணம் பிராவோ சொதப்பியது தான், தற்போதைய பிபிஎல் தொடரிலும் இதே நிலையில் தான் அவர் பந்துவீசினார். எனவே மீண்டும் அது பெரிய தொல்லையாக வாய்ப்புள்ளது.
பந்துவீச்சாளர்கள் மதிப்பெண்: 7/10.
எது எப்படியோ ஒரு குழுவாக சரியாக செயல்பட்டு அதை டோனி தனது பாணியில் வழிநடத்தினால், இந்தமுறையும் கோப்பை சென்னை அணிக்கு வசப்பட நிறைய வாய்ப்புள்ளது.