ஐபிஎல் 2019: சென்னை vs பெங்களூரு அணிகள் மோதும் போட்டியின் போது நிகழ வாய்ப்புள்ள 3 சாதனைகள்

விராட் கோஹ்லி மற்றும் தோனி
விராட் கோஹ்லி மற்றும் தோனி

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் வருகிற மார்ச் 23ம் தேதி சென்னையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியை இவ்விரு அணிகளுமே வெற்றி உடன் துவக்க மும்முரமாக உள்ளனர். மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. சென்ற வருட சாம்பியன் சென்னை அணி சொந்த மண்ணான சென்னையில் முதல் போட்டியை விளையாட உள்ளதால், வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது.

பெங்களூரு அணியை பொறுத்த வரை இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இருந்தாலும் வருடா வருடம் மற்ற அணிகளுக்கு நல்ல எதிராணியாகவே விளங்கியுள்ளது. இவ்விரண்டு அணிகளுமே ஜாம்பவான் வீரர்களை கொண்டுள்ளது. இவ்விரு அணிகளும் மோத உள்ள முதல் போட்டியில் நடக்க வாய்ப்புள்ள 3 சாதனைகள் பற்றிய தொகுப்பை காணலாம்.

#1 ரெய்னாவிற்கு தேவையான 15 ரன்கள்

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

சென்னை அணியின் முகவரியாக இருந்துவரும் கேப்டன் தோனிக்கு பிறகு அனைவருக்கும் பரீட்சயமாக உள்ளவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணியின் மிகச்சிறந்த பீல்டராக இருந்த இவர், சர்வதேச போட்டிகளிலும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். இடது பேட்ஸ்மேனான ரெய்னா, இதுவரை சரியாக விளையாடாத ஐபிஎல் சீசனே இல்லை என கூறலாம். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரான இவர், ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க இன்னும் 15 ரன்களே தேவைப்படுகிறது. இது வரும் தொடரின் முதல் போட்டியிலேயே நடைபெற அதிக வாய்ப்புள்ளது. இதுவரை 35 அரை சதமும், 1 சதமும் அடித்துள்ளார்.

#2 கோஹ்லிக்கு தேவைப்படும் 42 ரன்கள்

விராட் கோஹ்லி
விராட் கோஹ்லி

சென்னை அணிக்கு எப்படி தோனி முகவரியாக உள்ளாரோ, பெங்களூரு அணிக்கு விராட் கோஹ்லி முகவரியாக உள்ளார். இந்திய அணியின் தற்போதைய கேப்டனான இவர், 2018ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை தட்டிச்சென்றார். டெல்லி மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட வலதுகை பேட்ஸ்மேனான இவர், 42 ரன்கள் எடுத்தால் 5000 ரன்களை கடந்து விடுவார். சென்னை அணியின் ரெய்னா முதலில் இந்த சாதனையை படைப்பாரா இல்லை விராட் படைப்பாரா என்பது முதல் போட்டியில் தெரிந்துவிடும். விராட் கோஹ்லி 5000 ரன்களை கடக்கும் போது, ஒரே அணிக்காக விளையாடி 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை ஐபிஎல் தொடரில் 34 அரை சதமும் 4 சதமும் அடித்துள்ளார்.

#3 4000 ரன்களை கடக்க ஏபிக்கு தேவைப்படும் 47 ரன்கள்

ஏபி டீவில்லியர்ஸ்
ஏபி டீவில்லியர்ஸ்

கிரிக்கெட்டின் சூப்பர்மேன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் டீவில்லியர்ஸ். தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடி ஓய்வும் பெற்றுவிட்டார். இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. சொந்தநாட்டை தாண்டி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். வரும் ஐபிஎல் தொடரில் 47 ரன்களை கடக்கும் பட்சத்தில் 4000 ரன்களை கடந்துவிடுவார். தற்போது டி20 லீக் போட்டிகள் மட்டுமே விளையாடிவரும் டீவில்லியர்ஸ், இந்த சீஸனும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவரின் ஸ்ட்ரைக் ரேட் 150. 4000 ரன்களை இவர் கடக்கும் பட்சத்தில் இந்த சாதனையை படைத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அடைவார். முதல் இடத்தில் இருப்பவர், ஹைதெராபாத் அணியை சேர்ந்த டேவிட் வார்னர்.

Quick Links

Edited by Fambeat Tamil