2019 ஆம் ஆண்டுக்கான ஜபிஎல் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. வருகிற மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு இரண்டு வாரத்திற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை மத்திய அரசு தேர்தல் தேதிகள் அறிவித்தவுடன் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான முதல் போட்டி மார்ச் மாதம் 23ஆம் தேதி நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு வாரத்தில் மொத்தம் 17 போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து போட்டிகளும் 8 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் தலா 4 போட்டிகளில் விளையாட இருக்கின்றன. டெல்லி மற்றும் பெங்களூர் அணி இந்த முதல் இரண்டு வாரத்தில் ஐந்து போட்டிகள் விளையாடுகின்றனர். ஒவ்வொரு அணியும் சொந்த ஊரில் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கான அட்டவணை:
மார்ச் 23: சென்னை vs பெங்களூரு
மார்ச் 24: கொல்கத்தா vs ஹைதராபாத்
மார்ச் 24: மும்பை vs டெல்லி
மார்ச் 25: ராஜஸ்தான் vs பஞ்சாப்
மார்ச் 26: டெல்லி vs சென்னை
மார்ச் 27: கொல்கத்தா vs பஞ்சாப்
மார்ச் 28: பெங்களூரு vs மும்பை
மார்ச் 29: ஐதராபாத் vs ராஜஸ்தான்
மார்ச் 30: பஞ்சாப் vs மும்பை
மார்ச் 30: டெல்லி vs கொல்கத்தா
மார்ச் 31: ஹைதராபாத் vs பெங்களூரு
மார்ச் 31: சென்னை vs ராஜஸ்தான்
ஏப்ரல் 1: பஞ்சாப் vs டெல்லி
ஏப்ரல் 2: ராஜஸ்தான் vs பெங்களூரு
ஏப்ரல் 3: மும்பை vs சென்னை
ஏப்ரல் 4: டெல்லி vs ஹைதராபாத்
ஏப்ரல் 5: பெங்களூரு vs கொல்கத்தா
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருடங்கள் தடைக்குப் பிறகு சென்ற வருடம் ஐபிஎல் தொடரில் களம் இறங்கியது. அணியில் மூத்த வீரர்கள் எடுத்த காரணத்தினால் அவர்களால் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்று பலர் கருதினார்கள். அவர்களின் கூற்றை முறியடிக்கும் விதத்தில் சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி அணியை சிறப்பாக வழிநடத்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை காணமுடியாத ரசிகர்களுக்கு இந்த வெற்றி மாபெரும் விருந்தாக அமைந்தது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸின் மகேந்திரசிங் தோனி மூன்று முறையும் மும்பை அணியின் ரோகித் சர்மா மூன்று முறையும் கோப்பையை வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வருகின்ற தொடரில் இவ்விரு வீரர்களில் யாராவது ஒருவர் கோப்பையை வென்றால் ஐபிஎல் கோப்பையை நான்கு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அடைவார்கள். சென்னை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தல தோனி அணித்தலைவராக இதுவரை 94 ஐபிஎல் போட்டிகளில் வென்றுள்ளார். எனவே வருகின்ற தொடரில் மேலும் 6 போட்டிகளில் வென்று ஐபிஎல் வரலாற்றில் 100 வெற்றிகளைக் குவித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.