இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்று, சென்னை சூப்பர் கிங்ஸ். நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் முடிவில் புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது, சென்னை அணி. மேலும், நடப்பு தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை கொண்டது, சென்னை. இந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சற்று குழப்பங்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. ஏனெனில், அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வீரர்களான வாட்சன், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் போன்றோர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. இதனால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சீசனில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படும் மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.கேதர் ஜாதவ்:
34 வயதான கேதர் ஜாதவ் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் களமிறக்கப்பட்டு வந்தார். இவர் மீது அணி நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையால் தொடர்ந்து 14 லீக் போட்டிகளில் களமிறக்கப்பட்டார். இருப்பினும், நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் வெறும் 162 ரன்கள் மட்டுமே நடப்பு தொடரில் குவித்துள்ளார். கடந்த சீசனில் முதல் போட்டியிலேயே ஏற்பட்ட காயத்தால், தொடரில் இருந்து வெளியேறினார். அதேபோல், நடப்பு சீசனிலும் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். எனவே, அடுத்த முறை சென்னை அணி நிர்வாகம் இவரை தக்க வைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.அம்பத்தி ராயுடு:
சென்னை அணியின் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பத்தி ராயுடு, நடப்பு தொடரில் வழங்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் வீணாக்கி உள்ளார். தொடரின் 14 லீக் போட்டிகளில் விளையாடிய இவர், 219 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்பட்ட அம்பத்தி ராயுடு, தற்போது ஃபார்மின்றி தவிப்பதால், அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படலாம்.
#1.ஷேன் வாட்சன்:
37 வயதான ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், சென்னை அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்ல மிக உதவிகரமாக இருந்தார். ஆனால், அதற்கு எதிர்மாறாக நடப்பு தொடரில் தனது பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டு, இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் 258 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அவற்றில், ஒரே ஒரு அரை சதத்தை மட்டுமே இவர் தாண்டியுள்ளார். ஏற்கனவே, இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், இவரைத் தொடர்ந்து அணியில் தக்க வைக்கப்படுவாரா என்பதில் சந்தேகம் தான். இவரும் மேற்கண்ட இரு வீரர்களைப் போல அடுத்த ஐபிஎல் சீசனில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.