நேற்று விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்அணிகளுக்கு இடையேயான இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே குவித்தது. நேற்றைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபார பந்து வீச்சு தாக்குதல் தொடர்ந்தது. இதில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இரு விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பவர்பிளே ஓவர்களில் பந்து வீசி டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானை ஆட்டமிழக்கச் செய்தார். இது இவரது முதல் விக்கெட் ஆகும். இதன் பின்னர், ரூதர்ஃபோர்டு ஆட்டத்தின் இறுதி கட்ட நேரங்களில் விளையாடியபோது, ஹர்பஜன் சிங் மீண்டும் பந்து வீசி அவரது விக்கெட்டை கைப்பற்றினார். 4 ஓவர்கள் பந்துவீசி ஹர்பஜன் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றினார். வயது என்பது வெறும் எண் மட்டும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார், 39 வயதான ஹர்பஜன்சிங்.
ஆட்ட முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று எட்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இவ்வேளையில், ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் 150 விக்கெட்கள் கைப்பற்றிய நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை புரிந்துள்ளார். மேலும், அந்த வகையில் 150 விக்கெட்களை கைப்பற்றி மூன்றாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார். லசித் மலிங்கா, அமித் மிஸ்ரா ஆகியோருக்குப் பின்னர் பியூஸ் சாவ்லா உடன் 150 விக்கெட்களை கைப்பற்றி பட்டியலில் இணைந்துள்ளார், ஹர்பஜன் சிங். மேலும், 150 விக்கெட்களை கைப்பற்றிய முதல் ஆஃப் ஸ்பின்னர் என்ற சாதனையையும் கடந்துள்ளார். இவரது பௌலிங் எக்கானமி 7.05 என்ற வகையில் மிக சிறப்பாக அமைந்துள்ளது.
இதுமட்டுமல்லாது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற மைல்கல்லையும் அடைந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்கு எதிராக 24 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். நடப்பு சீசனை பொருத்தவரை 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஹர்பஜன் சிங் 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடர்களில் ஒரு சீசனில் 15 விக்கெட்களை வீழ்த்துவது இவருக்கு நான்காவது முறையாகும். கடந்த இரு சீசன்களை சேர்த்து, ஒப்பிடும் போது கூடுதலாக ஒரு விக்கெட்டை தற்போது கைப்பற்றி உள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி வெற்றியின் பங்கு அனைத்தும் சுழற்பந்து வீச்சாளர்களையே சாரும் என்று கூறியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது, "இந்த வெற்றியில் பங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சேரும். நான் ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் கேட்கும்போது இவர்கள் வந்து பந்துவீசீனார்கள். கடந்த 45 முதல் 50 நாட்களாக கடினப்பட்டு தங்களை ஃபிட்டாக வைத்துள்ளனர். மேலும், சற்று கடினமான தருணங்களில் கூட தங்களால் முடிந்தவரை சிறப்பான பந்துவீச்சை அளிக்கின்றனர்".
நேற்றைய போட்டி சென்னை அணியின் நூறாவது வெற்றியாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு இரண்டாவதாக நூறு வெற்றிகளை கடந்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். நேற்றைய வெற்றியின் மூலம், நாளை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவது இது நான்காவது முறையாகும்.