2019 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார், சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர். மேலும், இதுவே நடப்பு தொடரில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்கள் ஆகும். ஏற்கனவே, 2010 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் பிரக்யான் ஓஜா 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த தொடரில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்கள் என்ற சாதனையை புரிந்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான கடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். அதுமட்டுமல்லாது, நடப்பு தொடரில் தனது சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்தார்.
நடப்பு தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் டெல்லி அணியின் ரபாடா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இவர் 12 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். நடப்பு தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு அடி எடுத்து வைத்த முதல் அணி என்ற பெருமையை கொண்டுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த அணியின் முக்கிய இரு சுழல் பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் நடப்பு தொடரில் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பிடும் வகையில், தென்ஆப்பிரிக்கா வீரரான இம்ரான் தாஹிர் தனது பௌலிங் எக்கனாமிக் ஆன 6.3 என்ற அளவில் கச்சிதமாக பந்து வீசி வருகிறார். மேலும், இதுவரை இல்லாத அளவில் மிக வெற்றிகரமான ஐபிஎல் தொடராக 2019 சீசன் இவருக்கு அமைந்துள்ளது.
"பராசக்தி எக்ஸ்பிரஸ்" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் நடப்பு தொடரில் மூன்று முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஏற்கனவே, தொடரில் இருந்து விலகியுள்ளார், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. எனவே, இன்னும் 4 விக்கெட்டுகளை அள்ளினால் நடப்பு தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெறுவார், இம்ரான் தாகிர். ஆகையால், இன்று நடக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இத்தகைய சாதனையை புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இல்லை என்றாலும் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளதால் கூடுதலாக போட்டிகளில் விளையாட நேரிடும். எனவே, தொடரில் ஒரு சுழல் பந்துவீச்சாளர் அதிக விக்கெட்களை கைப்பற்றுவது என்ற ஒன்பது ஆண்டு கால சாதனையை இம்ரான் தாகிர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது இறுதி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் மோதவிருக்கும் சென்னை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழும் இம்ரான் தாகிர், இன்று 4 விக்கெட்களை கைப்பற்றி ரசிகர்களுக்கு விருந்து அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.