2019 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் இன்று(மார்ச் 25) இரவு 8 மணிக்கு ஜெய்பூரில் சவாய் மான்சிங் மைதானத்தில் மோத உள்ளன.
ஒட்டுமொத்த நேருக்கு நேர் புள்ளி விவரங்கள்: ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியுள்ளன. அதில் 10 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
சவாய் மான் சிங் மைதானத்தில் இரு அணிகளின் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இதுவரை 7 லீக் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கள ரிப்போர்ட்: ஜெய்ப்பூர் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்ப ஓவர்களில் சிறிது சாதகமாக இருக்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2018 ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் விளையாடிய முதல் 9 லீக் போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இரண்டாவது பாதியில் 6 ல் 4 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், அஜின்க்யா ரகானே, சஞ்சு சாம்சன்
ஜாஸ் பட்லர் கடந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாட அழைப்பு வந்ததால் அரையிறுதியில் விளையாடமல் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார். 2018 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் பங்கேற்று 58.80 சராசரியுடன் 548 ரன்களை எடுத்தார். இதே ஆட்டத்திறனை 2019 ஐபிஎல் தொடரிலும் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில காரணங்களால் கடந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்காத ஸ்டிவன் ஸ்மித் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அத்துடன் தனது ஆட்டத்திறனை முழுவதும் ஐபிஎஸ் தொடரில் வெளிபடுத்த போவதாக ஸ்டிவன் ஸ்மித் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் மற்றும் அஜின்க்யா ரகானே கடந்த ஐபிஎல் தொடரில் 441 மற்றும் 380 ரன்களை குவித்தனர். ஜாஸ் பட்லர் இல்லா சமயங்களில் ஆட்டத்தை எடுத்துச் சென்ற புகழ் இவர்களை சேரும்.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை மேலும் வலிமையாக்க இந்த வருட ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்டன் டர்னர் ஆகியோரை கூடுதலாக சேர்த்துள்ளது. லிவிங்ஸ்டன் 2019 பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் 321 ரன்களை விளாசி அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆஸ்டன் டர்னர் 2018-19 பிக்பேஸ் தொடரில் 378 ரன்களை எடுத்தார். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரின் பாதியில் அணியில் இனைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சாளர்கள்
நட்சத்திர வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்சர், கிருஷ்ணப்பா கௌதம், ஜெய்தேவ் உனட்கட்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு ஜோஃப்ரா ஆர்சர், கிருஷ்ணப்பா கௌதம், ஜெய்தேவ் உனட்கட் ஆகிய மூவரையே நம்பியுள்ளது. ஆர்சர் 2018 ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிருஷ்ணப்பா கௌதம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருவருமே பவர்பிளேவில் அதிகமுறை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
உனட்கட் 2019 ஐபிஎல் தொடரில் மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தால் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரிலிஸ் செய்தது. பின்னர் 2019 ஏலத்தில் மீண்டும் ராஜஸ்தான் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 5 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
உத்தேச XI:
ஜாஸ் பட்லர், அஜின்க்யா ரகானே (கேப்டன்), ராகுல் திர்பாதி, சஞ்சு சாம்சன், ஸ்டிவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஸ்ரேயஸ் கோபால், கிருஷ்ணப்பா கௌதம், ஜோஃப்ரா ஆர்சர், ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி/வரூன் ஆரோன்.
கிங்ஸ் XI பஞ்சாப்
கடந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கியது கிங்ஸ் XI பஞ்சாப். 2018 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் 7 ல் 6 போட்டிகளில் வென்று புள்ளி அட்டவனையில் முதலிடத்தை வகித்தது பஞ்சாப் அணி. அடுத்த 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே பஞ்சாப் அணி வென்றது. இதனால் அரையிறுதி வாய்ப்பையும் இழந்து புள்ளி அட்டவனையில் 7வது இடத்தை பிடித்தது பஞ்சாப் அணி.
பேட்டிங்
நட்சத்திர வீரர்கள்: கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், நிக்கோலஸ் பூரான்
கிறிஸ் கெய்ல் எந்த அணியில் விளையாடினாலும் எதிரணிக்கு கடும் நெருக்கடியை அளிப்பவர். கடந்த ஐபிஎல் தொடரில் 368 ரன்களை கிறிஸ் கெய்ல் குவித்தார். தற்போது முடிந்த இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தினார். 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 424 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் அடங்கும்.
கே.எல்.ராகுல் கடந்த ஐபிஎல் சீசனில் அசுர பேட்டிங்கை வெளிபடுத்தி 659 ரன்களை குவித்து எதிரணி பந்துவீச்சை சிதைத்தார். அந்த சீசனில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார் கே.எல்.ராகுல். 2019 ஐபிஎல் தொடரிலும் இதே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிக்கோலஸ் பூரான் மற்றும் பிரஸிம்ரன் சிங் பஞ்சாப் அணிக்கு புதிதாக இனைந்துள்ளனர். இருவருமே சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள்.
பந்துவீச்சாளர்கள்
நட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் டை, முஜிப் யுர் ரகுமான், முகமது ஷமி
கடந்த ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார் ஆன்ரிவ் டை. இதே ஆட்டத்திறனை இவ்வருடமும் வெளிபடுத்த அதிக வாய்ப்புள்ளது. இவருடன் முகமது ஷமி வேகப்பந்து வீச்சில் இனைந்து விளையாடுவார். பெரும்பாலும் இவர்கள் இருவரையே பஞ்சாப் அணி கேப்டன் அதிகம் விரும்புவார்.
சுழற்பந்து வீச்சில் முஜிப் யுர் ரகுமான், ரவிச்சந்திரன் அஸ்வின், வரூன் சக்ரவர்த்தி ஆகியோர் அசத்த உள்ளனர். இவர்களின் பௌலிங்கை எதிர்கொள்வது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச XI:
கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயான்க் அகர்வால், கரூன் நாயர், மந்தீப் சிங், சாம் குர்ரான், வரூன் சக்ரவர்த்தி, ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), ஆன்ரிவ் டை, முகமது ஷமி, முஜிப் யுர் ரகுமான்.